தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் : ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மத்திய அரசு பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல புதிய சட்டம் கொண்டு வந்திருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நிகழ்ந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்திருப்பதாக ராகுல் காந்தி பேசியதாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி, எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எழுப்பியதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், 2 நாட்களில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.