நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று தனது கன்னி உரையை ஆற்றிய பிரியங்கா காந்தி அரசியலமைப்பு சட்டத்தை பாஜக அவர்கள் நினைப்பது போல் மற்றிக்கொண்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். நமது அரசியலமைப்பு சட்டம் மக்களின் உரிமை, ஒற்றுமை, நீதியை பாதுகாக்க கூடியது என குறிப்பிட்ட பிரியங்கா காந்தி ஆனால், ஆளும் பாஜக அரசு அதனை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் ஆதரவாக உள்ளோம் என சொல்லிக்கொண்டு விவசாய சட்டங்களை தொழிலதிபர்களுக்கு சாதகமாக பாஜக மாற்றியுள்ளதாக விமர்சித்தார். பாஜக அரசு அதானி என்ற ஒற்றை மனிதருக்காக வேலை பார்த்து வருவதாகவும், விமானநிலையங்கள், சாலைகள், ரயில்வே பணிகள், சுரங்கங்கள் என அனைத்தும் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எல்லாவற்றிக்கும் நேருவை குறை சொல்லும் பாஜக எப்போது நிகழ்காலத்தை பற்றி சிந்திக்க போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கையை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும் அதற்கு மாறான செயல்களில் மட்டும் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் சாடினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் என்றும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பது அவசியம் என்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் வலியுறுத்தி பேசினார்.