கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 'நவம்பர் புரட்சி' எனப்படும் இந்த மோதல், கட்சியின் உள்நிலை சமநிலையை சீர்குலைக்கக்கூடும். இதனால், காங்கிரஸ் தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள்ளே, அதிகாரப் போட்டி தீவிரமடைந்திருக்கிறது. முதல்வர் பதவியைச் சுற்றியுள்ள இந்த மோதல், இப்போது ‘நவம்பர் புரட்சி’ என்ற பெயரிலே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இருவருக்குமிடையே யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. 2023 - மே மாத சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்த சமயத்தில், கட்சியின் உள்நிலை சமநிலைக்காக, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது “முதல்வர் பதவி ரொட்டேஷன்” ஒப்பந்தம் நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் வதந்திகள் பரவின.
இத்தகைய சூழ்நிலையில், தற்போது, சித்தராமையா ஆட்சியை ஏற்று சுமார் ஒன்றரை வருடம் ஆன நிலையில், சிவகுமாரின் ஆதரவாளர்கள் ‘நவம்பரில் ஆட்சிப் பொறுப்பை மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள். மறுபுறம், சித்தராமையா ஆதரவாளர்கள் ‘முழு ஐந்து வருடமும் சித்தராமையா தான் முதல்வராக தொடர வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ளனர்.
“இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மேலிடமான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இந்த நிலைமைக்கு உள்துறை அறிக்கைகள் சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.”
அதேவேளையில், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை ஒரு அரசியல் ஆயுதமாக எடுத்துக்கொண்டுள்ளது. ‘நவம்பர் புரட்சி’ வரப்போகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தாறுமாறாகப் போகிறது என குற்றச்சாட்டு எழுப்பி வருகிறது.
இந்நிலையில், அதிகாரப் போட்டியில் யார் மேலே வருவார்கள்?சித்தராமையா தொடர்வாரா? அல்லது, டி.கே. சிவகுமார் ‘நவம்பர் புரட்சி’யை வெற்றிகரமாக்குவாரா? இவை அனைத்துக்கும் முடிவை சொல்லப்போகும் முக்கிய மாதம் தான் இந்த நவம்பர்.
கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நாற்காளி சண்டை உருவாகியிருக்கும் நிலையில், முதல்வர் நாற்காலியைச் சுற்றிய இந்த உட்கட்சி மோதல் அடுத்த சில வாரங்களில் இந்திய அரசியலையே அதிரவைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.