தங்கம் வாங்குறீங்களா.. இதோ குட்நியூஸ்! ஒரே நாளில் மெகா சரிவு.. 10 நாட்களில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!
தங்கத்தின் விலை இன்று அதிக அளவிலான சரிவை கண்டுள்ளது. காலை நேரத்திலேயே தங்க விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து இருந்தது. அதேபோல், மாலையிலும் கூடுதலாக ரூ.1,800 சரிவை கண்டுள்ளது. அதாவது ஒரே நாளில் மொத்தமாக ரூ.3000 சரிந்துள்ளது. சென்னை நகரில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.91,600-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.88.600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சமீபகால தங்க சந்தையில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
கிராமுக்கு விலை கணக்கிட்டால், தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,075 என விற்கப்படுகிறது. இது ரூ.225 குறைவு எனக் கூறப்படுகிறது.
உலக அளவில் அசாதாரண சூழல் ஏற்படும் போது தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்படும். “கடைசியாக சில வாரங்களாக தங்கம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் தற்போது இந்த திடீர் வீழ்ச்சி, திருமணத்திற்காக தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது.
“சென்னையுடன் சேர்த்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களிலும் தங்க விலைகள் அதேபோல் குறைந்து காணப்படுகின்றன. தங்க விலை இன்னும் சில நாட்களில் நிலைபேறாகுமா அல்லது மேலும் குறையுமா என்ற கேள்விக்கு, நிபுணர்கள் சந்தை நிலவரத்தைப் பொறுத்தே சொல்ல முடியும் என்கிறார்கள். மொத்தத்தில் இன்று தங்க சந்தை வாடிக்கையாளர்களுக்கு சிரிப்பு கொடுத்த நாள்! சவரனுக்கு ரூ.3,000 வரை குறைவு தமிழக தங்க நுகர்வோருக்கு நிச்சயமாக ஒரு சின்ன தீபாவளி பரிசு என்று சொல்லலாம்.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரத்தை பொறுத்தவரை சுமார் 7,400 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி ரூ.96,000 ஆக இருந்த தங்கம் விலை, அடுத்தடுத்த நாட்களில் ரூ.95,360, ரூ.96,000, ரூ.92,320, ரூ.92,000, ரூ.91,200, ரூ.92,000, ரூ.92,000, ரூ.91,600 ஆக சரிந்து கொண்டே வந்து இன்று ரூ.88.600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
2021 அக்டோபர் மாதம் கிராமுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 487 ஆக இருந்த தங்கம், கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி 12 ஆயிரத்து 170 ஆக உயர்ந்து உச்சம் தொட்டது. கடந்த ஓராண்டில் மட்டுமே 60 சதவீதம் அளவுக்கு தங்கம் விலை உயர்வு கண்டது. அப்பொழுது விரைவில் 8 கிராம் ஆபரணத் தங்கமே ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் சரிவு தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையில் நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தை உள்ளிட்டவை தங்கம் விலை சரிவுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.
சரிவுக்கான காரணங்கள்..
முதலாவதாக, கடந்த மாதங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பாதுகாக்கும் வகையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் உலக சந்தையில் விலை தற்காலிகமாக தங்கம் விலை தளர்ந்துள்ளது.
இரண்டாவதாக, அமெரிக்க டாலர் மதிப்பு சமீபத்தில் வலுப்பெற்றுள்ளது. பொதுவாக டாலர் வலுப்பெறும் போதும் தங்கத்தின் விலை குறையும் போதும் பொருளாதார விதிமுறைகள் பொருந்துகின்றன. இதேபோல், அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெட்’ வட்டி விகிதம் குறையாது என்ற எதிர்பார்ப்பு கூட தங்கத்தின் தேவை குறைய காரணமாகியுள்ளது.
மூன்றாவதாக, உலகளவில் போர் பதற்ற சூழல் சற்றே தணிந்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் நெருக்கடி சூழல் சற்றே குறைந்துள்ளது. இதனால், “பாதுகாப்பான முதலீடு” என்ற வகையில் தங்கம் மீதான அவசர தேவை குறைந்துள்ளது.
நான்காவதாக, இந்தியாவில் உள்ளூர் அளவில் நகை வாங்கும் மக்கள் சற்று தளர்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் விலை உயர்ந்திருப்பதால், நகை விற்பனையாளர்கள் புதிய ஆர்டர்களை குறைத்துள்ளனர். இதன் விளைவாக சந்தையில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், விலை அதிகரித்திருந்ததன் காரணமாக தொழில்நுட்ப திருத்தம் (Technical Correction) ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது சந்தையின் இயல்பான சீரமைப்பு என கருதப்படுகிறது.
தங்கம் விலையில் தற்காலிகமாக சரிவு இருந்து வந்த போதும், மீண்டும் விலை உயராது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால், சிலர் உடனடியாக தங்கம் வாங்கவும் முற்படுவார்கள். சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்படும் போது தங்கம் விலையில் மேலும் மாற்றங்கம் நிகழக்கூடும்.

