பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இருவருக்கும் இந்த மாதம் 75 வயதாகும் சூழலில், மோகன் பகவத்தை வாழ்த்தி, பிரதமர் மோடி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு மோகன் பகவத்தின் பங்களிப்பு, தனக்கும் மோகன் பகவத்திற்கும் உள்ள நெருக்கம் ஆகியவற்றை கூறிச்செல்லும் மோடி, கட்டுரையில் குறிப்பிடும் சில விஷயங்கள் மறைமுகமாக ஆர்எஸ்எஸ்ஸுக்கும் அதன் தலைவருக்கும் அவர் சொல்லும் செய்திகளாக அமைந்துள்ளன.
முன்னதாக 75 வயதாகிவிட்டால் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற தொனியில் பேசிவந்தார் மோகன் பகவத். பகவத்தைப் புகழ்ந்து மோடி எழுதியிருக்கும் கட்டுரையில், “தாய்நாட்டுக்கு நீண்டகாலம் சேவையாற்ற வேண்டும் மோகன்பகவத்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மோகன் பகவத்தும் தானும் தத்தமது பணியைத் தொடரவேண்டும் என்ற மோடியின் விருப்பம் வெளிப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
மேலும் இந்த கட்டுரையில் மோடி குறிப்பிடும் சில விஷயங்கள் தலைமைப் பொறுப்பு தொடர்பான பிரதமரின் கருத்துக்களை நேரடியாகவே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தலைமைப் பதவி என்பது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு என்பதைக் காட்டிலும் மேலானது என்று மோடி கூறியுள்ளார். தனிநபர் அர்ப்பணிப்பு, துல்லியமான நோக்கம் மற்றும் பாரதத் தாயிடம் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை தலைமைப் பொறுப்புக்கான வரையறையாக தலைசிறந்த ஆளுமைகள் ஆக்கியுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார்.
தனக்கு அளிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் என்ற இமாலயப் பொறுப்பில் முற்றிலும் நேர்மையை வெளிப்படுத்தியவர் என்று பகவத்தை மோடி பாராட்டியுள்ளார். வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் கூடிய தலைமைத்துவத்தை பகவத் கொண்டிருந்ததாக மோடி கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் சூழ்நிலைக்கேற்ற தகவமைப்பு, மோகன் பகவத்தின் சிறந்த பண்புகள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
75 வயதை நிறைவு செய்திருக்கும் மோகன் பகவத் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று மனதார வாழ்த்துவதாக மோடி தனது கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார். இதன் மூலம் தலைமைத்துவத்துக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை, மறைமுகமாக, அதே நேரம் அழுத்தமாக மோடி வெளிப்படுத்தியிருப்பதாக புரிந்துகொள்ள முடிகிறது. வரும் செப்டம்பர் 17இல் 75 வயதை நிறைவு செய்யவுள்ள மோடி, தானும் தலைமையில் தொடர விரும்புவதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறார்.