அன்புமணி நீக்கம்.. தந்தை - மகன் மோதலின் பின்னணி.. களமிறக்கப்படும் மகள்.. ஒரு விரிவான அலசல்!
பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது.
பாமகவில் தந்தை - மகன் இடையே மோதல்
பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டுள்ளார். இதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ பதில் அளிக்கலாம் என ராமதாஸ் தரப்பு, முதல் கெடு விதித்தது. ஆனால் அன்புமணி பதில் அளிக்காததால், மீண்டும் 2வது முறையாக வாய்ப்பு வழங்கியது. அது, நேற்றுடன் முடிந்த நிலையில், அதற்கும் அன்புமணி பதிலளிக்காததால், ராமதாஸ் அவரை இன்றுமுதல் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது. உரிய விளக்கம் அளிக்காததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகிவிட்டன. அன்புமணியின் செயல்கள் தலைமைக்கு கட்டுப்படாத வகையில் உள்ளன. பாமகவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசியல் தலைவராகச் செயல்பட அன்புமணி தகுதியற்றவர். மூத்தவர்கள் கூறிய அறிவுரைகளை அன்புமணி கேட்கவில்லை. பாமக உறுப்பினர்கள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்கத் தயார். தேவைப்பட்டால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அவர், தனிக்கட்சி தொடங்கினாலும் அது வளராது” எனத் தெரிவித்துள்ளார்.
நீக்கம் தொடர்பாக அன்புமணி தரப்பு பதில்
அதேநேரத்தில் அன்புமணியின் நீக்கத்திற்குப் பதிலளித்த வழக்கறிஞர் பாலு, ''பாமகவில் நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது என எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினுடைய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே, இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பு கட்சிக்கு விதிகளுக்கு எதிரானது. பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் ராமதாஸின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது. கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்ந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எவை?
மைக்கை தூக்கிப் போட்டு ராமதாஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது;
பனையூரில் தனி அலுவலகம் அமைத்து தொண்டர்களை வர அழைப்புவிடுத்தது;
100 மா.செ.க்களை வராமல் தடுத்தது;
ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது;
அனுமதி பெறாமல் பொதுக்குழு நடத்தியது;
சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது என அவற்றுள் அடக்கம்.
அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் இடையில் மோதல் ஆரம்பமானது எப்போது?
கடந்த ஆண்டு இறுதியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது கட்சியில் இளைஞர் சங்கத் தலைவரை நியமிப்பதில் இருவருக்குமிடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய ராமதாஸ், ”முகுந்தன் மாநில இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்று, அன்புமணி ராமதாஸுக்கு உதவியாக இருப்பார்” என்றார். ஆனால் அவரது பேச்சை இடைமறித்த அன்புமணி, முகுந்தன் தொடர்பான நியமனத்திற்கு தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்கணும். நான் சொல்வதைக் கேட்கவில்லை எனில், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உண்டாக்கிய கட்சி” என்றார். இதற்கு, “அது சரி, அது சரி” என்றார், அன்புமணி.
பின்னர் மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதைக் கேட்ட அன்புமணி, மைக்கை மேஜை மீது தூக்கிப் போட்டார். பின்னர், ”சென்னை பனையூரில் அலுவலகம் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். அங்கே வந்து என்னைப் பார்க்கலாம்” என போன் நம்பர் ஒன்றையும் தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பிறகு, பாமக இரண்டு அணிகளாகச் செயல்பட்டன. அவற்றை ஒன்றிணைக்கும் பணியில் பலரும் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே இருவரும் தனித்தனியாக கட்சிப் பொறுப்பாளர்களர்களை நியமித்தனர். தவிர, கூட்டங்களையும் அரங்கேற்றினர். இதன் விளைவாக இறுதிவரை முட்டல் மோதலுடன் தொடங்கிய அவர்களது பனிப்போர், இன்று அன்புமணியின் நீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
பதவியிலிருந்து விலகிய முகுந்தன் யார்?
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன்தான் முகுந்தன். முகுந்தனின் சகோதரர் ப்ரீத்தீவனுக்குத்தான் தனது மூத்த மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார் அன்புமணி. பொறியாளரான முகுந்தன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த ஆண்டு இடையில் பாமகவில் இணைந்த அவர், கட்சியின் சமூக ஊடகப் பேரவை மாநிலச் செயலாளர் பொறுப்பு வகித்தார். இந்நிலையில்தான், தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை கட்சியின் இளைஞரணித் தலைவராக்க ராமதாஸ் முடிவு செய்தார். ஆனால், அக்கா மகனான முகுந்தனுக்கு, தான் வகித்த இளைஞரணித் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கு அன்புமணியே போர்க்கொடி தூக்கினார். அதேநேரத்தில், பாமகவில் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முகுந்தன் தன் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார்.
காந்திமதியைக் களமிறக்கிய ராமதாஸ்
மறுபுறம், அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். தவிர, மகனுடன் சமாதானம் ஏற்படாத நிலையில், தன் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் முன்னிறுத்தி வருகிறார். கடந்த ஜூலை 8ஆம் தேதி, திண்டிவனத்தில் நடந்த பா.ம.க., செயற்குழுவில், ஸ்ரீ காந்திமதி மேடையேறினார். கடந்த 10ஆம் தேதி பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டிலும் ஸ்ரீகாந்திமதி பேசினார். தற்போது அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், ஸ்ரீகாந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அன்புமணி, தனது மனைவி செளமியாவை அரசியல் களத்தில் இறக்கியதாலேயே ராமதாஸ் அவர் மகளை பாமகவிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அன்புமணியின் அரசியல் பயணம்
‘பசுமைத் தாயகம்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராக தனது பொதுச் சேவையைத் தொடங்கிய அன்புமணி ராமதாஸ், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசியல் பயணத்திற்குள் நுழைந்தார். அப்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அதன்படி, அன்புமணி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். அதே ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சுகாதாரத் துறை கேபினட் அமைச்சராக அன்புமணி பொறுப்பேற்றார். 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004, 2019 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2014ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அன்புமணி ராமதாஸ். பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸும் தோல்வி அடைந்தார். அப்போது மாற்றம்… முன்னேற்றம்.. அன்புமணி.. என்ற முழக்கத்தோடு தேர்தலைச் சந்தித்தது பாமக. அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்த அன்புமணி, 2023 மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.