வெப் சீரிஸாக தியாகராஜ பாகவதர் கதையா? | The Madras Mystery – Fall of a Superstar | MKT
நிஜ சம்பவங்களை வெப் சீரிஸாக எடுத்து ஹிட்டடிப்பதை தொடர்ந்து செய்து வருகிறது சோனி லைவ் ஓடிடி தளம். ஏற்கெனவே `Scam 1992' மூலம் மிகப்பெரிய வெற்றியை தொட்டதால், அதனைத் தொடர்ந்து பல நிஜ சம்பவங்கள் சார்ந்து படைப்புகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவர்கள் அடுத்தாக வெளியிடப்போகும் சீரிஸ்களை அறிவித்துள்ளனர். அவற்றில் ஏற்கெனவே உள்ள சீரிஸ்களின் அடுத்த சீசன், புதிதாக வர இருக்கும் சீரிஸ் போன்றவை பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அவற்றுள் ஒரு முக்கியமான தமிழ் சீரிஸ் இடம்பெற்றுள்ளது.
இவற்றுள் நாம் கவனிக்க வேண்டிய சில சீரிஸ்கள் எனப் பார்த்தால்,
Scam 1992 and Scam 2003 போன்ற சீரிஸ்களின் வரிசையில் `Scam 2010: The Subrata Roy Saga' என்ற சீரிஸ் மூலம் இன்னொரு ஊழல் பற்றி பேச இருக்கிறார்கள். லல்லு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கதையை தழுவி எடுக்கப்பட்ட `Maharani' சீரிஸின் நான்காவது சீசன் வெளியாகவுள்ளது. ஃபீல் குட் ஃபேமிலி டிராமா சீரிஸ் Gullak-ன் ஐந்தாவது சீசன் வருகிறது. தெலுங்கில் த்ரிஷா நடித்த த்ரில்லர் சீரிஸ் Brinda-வின் இரண்டாவது சீசன் வருகிறது.
புதிதாக வர உள்ள சீரிஸ்களில் பொலிட்டிகல் த்ரில்லராக இந்தியில் உருவாகியுள்ள Dynasty, பிரதமாக இருந்த அப்பா இறந்துவிட, அந்த பொறுப்பு மகளுக்கு வந்த பின் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது. இதில் ரவீனா டான்டன் நடித்துள்ளார். இதுதவிர பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள `Sethurajan IPS', பசுபதி, விதார்த் நடித்துள்ள `குற்றம் புரிந்தவன்', சத்யராஜ் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ள `தீவினை போற்று', மிருணாளினி, தீஜே நடித்துள்ள `Free Love' போன்ற புது தமிழ் சீரிஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் மேலும் ஒரு சீரிஸும் அதிகம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அதுவே The Madras Mystery – Fall of a Superstar. நஸ்ரியா நசீம், நட்டி, சாந்தனு பாக்யராஜ், நாசர், ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் சினிமா சார்ந்த பீரியட் த்ரில்லராக உருவாக்கி இருக்கிறது இந்த சீரிஸ். விஜய் ஷோ ரன்னராக இருக்கும் இந்த சீரிஸை சூர்யபிரதாப் இயக்கியுள்ளார். அறிவிப்பு வீடியோவை பார்த்த பலரும், இந்த சீரிஸ் தியாகராஜ பாகவதர் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள சீரிஸ் தான் இது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சீரிஸின் இயக்குநர் சூர்யபிரதாப் தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் ஒரு வெப் சீரிஸில் பணியாற்றுவதாகவும், அதன் பெயர் The Madras Murder (வொர்க்கிங் டைட்டில்) எனவும் பதிவு செய்து, இந்த சீரிஸ் குறித்து "1940ல் ப்ரிட்டிஷ் கால இந்தியாவில் நடந்த ஒரு எல்லோ ஜர்னலிஸ்டின் கொலை வழக்கை பற்றிய க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை கதைகள் மீது எப்போதும் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதால், ஒருவேளை இது பாகவதர் கதையாக இருந்தால் பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் ஒரு சீரிஸாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.