ஓணம் pt web
இந்தியா

மகாபலியின் மறுவருகையை கொண்டாடும் கேரளாவின் ஓணம் திருவிழா..!

சேரர்கள் ஆண்ட கேரள மண்ணில் தனிப்பெரும் பண்டிகையாக ஓணம் கொண்டாப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அம்மாநிலத்திலும், அம்மாநிலத்தையொட்டிய தமிழக எல்லைப்பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

PT WEB

கேரளாவின் ஓணம் திருவிழா, மகாபலியின் மறுவருகையை கொண்டாடும் பண்டிகையாகும். மகாபலியின் நற்குணங்களை நினைவுகூர்ந்து, மக்கள் வீடுகளை அலங்கரித்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அறுசுவை உணவுகளை சமைத்து மகாபலியை வரவேற்கின்றனர். இந்த பண்டிகை, கேரள மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும்.

பண்டைய கேரளாவை ஆண்ட அசுர மன்னனான மகாபலியின் மறுவருகையை கொண்டாடும் நாள்தான் ஓணம். நீதி வழுவாது நேர்மை பாராட்டி ஆட்சி நடத்திய மகாபலி, தேவர்களின் பொறாமை காரணமாக விஷ்ணுவால் கொல்லப்பட்டார். என்றாலும், மகாபலியின் நற்குணங்களால் நெகிழ்ந்த  விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் அவர் தன்மக்களைக் காண பூலோகம் வரலாம் என வரம் அளித்தார். மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து, அறுசுவை உணவுகள் சமைத்து, கலைநிகழ்ச்சிகள் களைகட்ட மகாபலியை வரவேற்கும் பண்டிகையே ஓணம்.

மொத்தத்தில் அறுவடைத் திருவிழாவாக, மக்களை காத்த மாமன்னனை எப்படி போற்றவேண்டும் என்பதற்கு உதாரணமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நம்பிக்கை எதுவாயினும் கொண்டாட்ட மனநிலையை குறுகிய அளவில்வைத் திருக்கவில்லை கேரள மக்கள். சாதி மதம் பாராது கேரள மொழி பேசும் அனைத்து மக்களும் ஓணத்தை கொண்டாடிக் களிக்கின்றனர்.

10 நாட்கள் களைகட்டும் ஓணத்தில், சந்தனச் சேலை, சந்தனப் பொட்டு என கேரள பெண்கள் கூடியாடி குதுகலிக்கின்றனர். அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்கின்றனர். வெள்ளத்தில் பாயும் வள்ளங்களை கண்டு கொண்டாட்டம் அடைகின்றனர். இந்தப்படகு பந்தயங்கள் இந்தியாவில் எங்கும் காணமுடியாத வகையில் சிறப்பாக இருக்கிறது. கோயில்களில் அரங்கேற்றப்படும் கதகளி நிகழ்ச்சிகள் கேரள  பாரம்பரியத்தின் வேர்களை உணர்த்துகிறது.

திருவோண நாளில் ஐந்து கூட்டுவகைகள், இஞ்சிக் கறி, அடபிரதமான் என தனிச்சுவை மிகுந்த விருந்துச் சாப்பாடு பரிமாறப்படுகிறது. கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் ஓணக் கொண்டாட்டங்கள் நெஞ்சம் கவரும் வகையில் இருக்கும். விருந்தோம்பல், விளையாட்டு, கலை, இலக்கியம், விளையாட்டு, பக்தி என மனப்பந்தலை விசாலமாக்கும் ஓணம், கேரள மக்களின் உணர்வோடு கலந்த பண்டிகையாக உள்ளது.