மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ஜே பி நட்டா ஆகியோர், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்தியுடன் என்ன தொடர்பு என்பதை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஜார்ஜ் சோரஸ் அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றன எனவும் அத்தகைய அமைப்புகளின் கருத்துக்களை பரப்புபவர்கள் தேசவிரோத சக்திகள் எனவும் ஜெ பி நட்டா குற்றம் சாட்டினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை முடங்கியது. முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அப்போது, சிறப்பான முறையில் மாநிலங்களவையை வழி நடத்தும் அவைத் தலைவரை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவது சரியல்ல என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தெரிந்தாலும், தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய தீர்மானம் தேவை என வலியுறுத்தியுள்ளனர். முதலில் இத்தகைய தீர்மானத்துக்கு 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும், ஆனால், அதற்குள் கூட்டத்தொடர் முடிந்துவிடும். அதுமட்டுமின்றி, இரு அவைகளிலும் ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது.
மாநிலங்களவையை போல் மக்களவையிலும் ஜார்ஜ் சோரஸ் விவகாரம் வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். உணவு இடைவேளைக்குப் பிறகும் மக்களவையில் சலசலப்பு நீடித்தது. இதனையடுத்து, வரும் நாட்களில் அவையை சுமூகமாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்தார்.