I.N.D.I.A. கூட்டணி | காங்கிரஸை ஒதுக்கும் கட்சிகள்.. மம்தாவுக்கு பெருகும் ஆதரவு.. என்னதான் நடக்கிறது?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. முன்னதாக, இந்தக் கூட்டணியை ஆளும் பாஜகவுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கியிருந்தார். பின்னர், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போதே அதிலிருந்து விலகிய நிதிஷ், பாஜகவுக்குத் தாவினார். பாஜகவுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. இதனைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. மேலும், தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி, பெருத்த தோல்வியை அடைந்தது. இந்த விவகாரம் கூட்டணியில் மேலும் எதிரொலித்தது. காரணம், அதில் தொடர்ந்துவரும் சலசலப்புகள்தான்.
இன்னும் சொல்லப்போனால் I-N-D-I-A கூட்டணியில் காங்கிரஸுடன் சில கட்சிகள் அங்கம் வகித்திருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸை விரும்பவில்லை. கூட்டணியில்லாமல் தனித்தே போட்டியிட்டன. குறிப்பாக, மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் இது நன்றாகவே எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சியால் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த முடியவில்லை. தவிர, அவற்றின் வாக்குச் சதவிகிதமும் முன்பைவிட குறைந்தே வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி ராகுலின் தலைமையில் I-N-D-I-A கூட்டணி செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.
இந்தச் சூழலில்தான் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு இந்துத்துவா கொள்கையை தேர்தல் தோல்விக்கு பிறகு வலியுறுத்துவதாக குற்றம்சாட்டி உள்ள சமாஜ்வாதி கட்சி, மகா விகாஸ் அகாடியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், அதானி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. அதேநேரத்தில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என திரினாமூல் கட்சி கூறுகிறது. இதன் காரணமாகவே இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களால் கூட்டணியை வழிநடத்த இயலாத சூழலில், தான் கூட்டணியை நடத்த தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தேசிய அளவிலும் குழப்பம் உருவாகி உள்ளது. அவருடைய கருத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மம்தாவின் கருத்துக்கு சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதுபோல் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கருத்து தெரிவிக்காத நிலையில், ராகுல் காந்தியை தவிர இன்னொருவர் தலைமையை ஏற்க எத்தனை கட்சிகள் சம்மதிக்கும் என்ற கேள்வி I-N-D-I-A கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், I-N-D-I-A கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “எங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. திரிணாமூல் காங்கிரஸோ, லாலு பிரசாத் யாதவோ, அகிலேஷ் யாதவோ யாராக இருந்தாலும் I-N-D-I-A கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம். நாம் அனைவரும் I-N-D-I-A கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். யாரேனும் கூட்டணி தொடர்பாக புதிதாகக் கூறினாலோ அல்லது கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாலோ, அதனை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். இதுதொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) கருத்துகள் மூலம் இந்த விவகாரம் முன்னோக்கி நகரும். ராகுல் காந்தியின் தலைமையில் யாரும் குறை கூறவில்லை. யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவர் எங்கள் அனைவருக்குமான தலைவர்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தன்னை ஆதரித்த கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதிய தலைமையாக மம்தா பானர்ஜியை கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.