ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக, இந்தியா விதித்த பாகிஸ்தானியர்களுக்கான விசா கெடு, நேற்றுடன் முடிவடைந்தது. மருத்துவ விசா நாளையுடன் முடிவடைகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சரி இதையும் தாண்டி பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் தங்கியிருந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்தாண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமை மற்றும் வெளிநாட்டினருக்கான சட்டத்தின் அடிப்படையில் விசா முடிந்தும் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும் 3 லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதையடுத்து அட்டாரி - வாஹா எல்லையில் பாகிஸ்தானியர்கள் குவிந்து வருகின்றனர். மறுபுறம், அங்குச் செல்ல விருப்பமில்லாமல் பாகிஸ்தானியர்கள் சிலரும் அச்சப்பட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில் ஒருவராக, 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் பெண்ணும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒடிசாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானியரான சாரதா பாய் என்பவர், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் பகல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சாரதா பாய் உடனடியாக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் தமக்கு எந்தக்குடும்பமும் இல்லை என்றும், தம்மை குடிமகளாக ஏற்று, ஒடிசாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு சாரதா பாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானிலிருந்து எல்லை கடந்து வந்து இந்திய காதலரை மணந்த சீமா ஹைதர் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஹனிப்கான் என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பவ்சியா பானுவுக்கும் தூதரக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததால் காவல் துறையிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.