பஹல்காம் தாக்குதல் |விசா கெடு.. இந்திய காதலரை மணந்த பாக் பெண் வேண்டுகோள்!
2023ஆம் ஆண்டு மே மாதம், எல்லை தாண்டிய காதலால் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தவர், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர். தன்னுடைய 4 குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து காதலர் சச்சின் மீனாவை மணந்து இங்கேயே வசித்து வருகிறார். சட்டவிரோதமாக சீமா ஹைதர் இந்தியாவுக்குள் நுழைந்ததையடுத்து காவல் துறையின் விசாரணை வளையத்திலும் வைக்கப்பட்டார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும், எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியா விதித்த பாகிஸ்தானியர்களுக்கான விசா கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து அட்டாரி - வாஹா எல்லையில் பாகிஸ்தானியர்கள் குவிந்து வருகின்றனர்.
மறுபுறம், அங்குச் செல்ல விருப்பமில்லாமல் பாகிஸ்தானியர்கள் சிலரும் அச்சப்பட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே கோரிக்கையை சீமா ஹைதரும் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் காணொளியில், ”நான் இப்போது மோடி ஜி மற்றும் யோகி ஜியிடம், அவர்களின் அடைக்கலத்தில் இருக்கிறேன் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். ஆனால் இப்போது இந்தியாவின் மருமகள். என்னை இங்கேயே இருக்க விடுங்கள். நான் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரிடம் நான் இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது வழக்கறிஞரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர், “நாடு தழுவிய எதிர்ப்பு இருந்தபோதிலும், அவர் இனி ஒரு பாகிஸ்தான் குடிமகள் அல்ல என்பதால், அவர் இந்தியாவில் வாழ அனுமதிக்கப்படுவார். சீமா, இனி பாகிஸ்தானியர் அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை மணந்தார். சமீபத்தில் அவர்களுக்கு பாரதி மீனா என்ற மகள் பிறந்துள்ளார். அவரது குடியுரிமை இப்போது அவரது இந்திய கணவருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் உத்தரவு அவருக்குப் பொருந்தக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் கராச்சியில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறி இந்தியா வந்த சீமா, ஜூலை மாதம், உத்தரப்பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் ரபுபுரா பகுதியில் சச்சினுடன் வசித்து வந்தார். பின்னர், இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. தற்போது, இந்த ஜோடி உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகிறது.