முடிவடையும் விசா கெடு | இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்கள்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு அந்த நாடும் விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு எல்லை தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ”இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலம் முடிவடைவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” எனக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ”இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியிருந்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்கள், நாளை (27ஆம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கான மருத்துவ விசாக்கள் 29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தானியர்களைக் கண்காணித்து வெளியேற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, அட்டாரி - வாஹா எல்லையில் பாகிஸ்தானியர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ”பாகிஸ்தானுக்குச் செல்வதைவிட, இந்தியாவிலேயே இறந்துவிடுகிறோம்” என இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானிய இந்து அகதிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ஓர் அகதிகள் முகாமில், வாஹா-அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பல குடும்பங்களை NDTV கண்டறிந்தது. இவர்கள் அனைவரும், பாகிஸ்தானிலிருந்து குறுகிய கால விசாக்களில் இந்தியாவிற்கு வந்தவர்கள். இவர்கள்தான் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர். ”பாகிஸ்தான் உள்ள இடங்களை விற்றுவிட்டோம். ஆகையால் இனி, பாகிஸ்தான் போன்ற நரகத்திற்குத் திரும்பவது ஏற்றுக்கொள்வதாக இல்லை. அதற்குப் பதிலாக இந்தியாவில் இறப்பதையே ஏற்றுக்கொள்ளலாம். பாகிஸ்தானுக்குத் திரும்புவதில் ஆர்வம் ஏற்படவில்லை. அதற்குப் பதில் மரணமே சிறந்தது. ஆகையால் தயவுசெய்து எங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம்” என அவர்கள் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த விசா கெடு, நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.