‘வெளிநாடுகளுடனான வியாபாரம்’ என்ற அம்சத்தில் – குறிப்பாக இறக்குமதியில் இந்திய அணுகுமுறை கட்டுப்பெட்டித்தனமாகத்தான் நீண்ட காலம் இருந்தது; ‘என்ஏஎம்’ (அணிசாரா நாடுகள்), ‘தெற்கு-தெற்கு’ (வளரும் நாடுகள் கூட்டு) என்று வெவ்வேறு வெளிநாட்டு அமைப்புகளில் இடம் பெற்றிருந்தும்கூட, பிற நாடுகளுடனான வர்த்தகத்தைப் பெருக்குவதிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதிலும் இந்தியாவுக்கு அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. வெளிநாட்டு வர்த்தகத்துக்குத் திறந்துவிடாமல் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் கதவுகளை மூடியே வைத்திருந்தோம்.
இறக்குமதி – ஏற்றுமதி நடைமுறைகளுக்கு அச்ச உணர்வு காரணமாகவே நடைமுறைகளைச் சிக்கலாக வகுத்து வைத்திருந்தோம்; எதை வாங்குவதாக இருந்தாலும் - விற்பதாக இருந்தாலும் அதற்கு அரசிடம் உரிமம் (லைசென்ஸ்), எந்த அளவு என்பதற்கு அனுமதி (பெர்மிட்) ஆகியவற்றைப் பெற வேண்டும் என்று வகுத்தோம். பெரும்பாலான இறக்குமதிகளும் சில ஏற்றுமதிகளும்கூட அரசுக்குச் சொந்தமான பெரு நிறுவனங்கள் மூலமாகவே நிகழ்த்தப்பட்டன. ‘இறக்குமதி – ஏற்றுமதிகளுக்கான தலைமைக் கட்டுப்பாட்டாளர்’ என்ற பெயரிலேயே தனி அதிகாரியை நியமித்திருந்தோம்; அவருடைய தலைமையின் கீழ் மிகப் பெரிய அதிகாரிகள் பட்டாளம் நாடு முழுவதும் செயல்பட்டது. அவர்களின் ஒரே வேலை, ஏற்றுமதி – இறக்குமதிக்கு உரிமங்களை வழங்குவதுதான்; அது நல்ல ‘லாபகரமான’ தொழில்! ‘எல்லாம் சரி, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அதிகாரி இருப்பது அவசியம் என்பது புரிகிறது – ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு எதற்கய்யா அதிகாரி?’ என்று அந்தக் காலத்தில் யாரும் கேள்வி எழுப்பவேயில்லை!
அந்தக் கொள்கையானது ஏற்றுமதியையும் பெருக்கவில்லை, ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைத் துறையையும் வளர்க்கவில்லை, வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பையும் கூட்டவில்லை. இதற்கிடையே, இந்திய அளவுக்கே பொருளாதாரத்தில் இருந்த சில வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரத் துறைகளைத் திறந்துவிட்டு தடையற்ற வாணிபத்தை ஊக்குவித்து பணக்கார நாடுகளாகிவிட்டன.
வெவ்வேறு காரணங்கள் ஒரே சமயத்தில் திரண்டு, இந்தியப் பொருளாதாரத்தை 1990-91-இல் மிகப் பெரிய நெருக்கடியில் தள்ளிவிட்டன. வேறு வழியில்லாமல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்கள், தொழில் கொள்கை சீர்திருத்தங்கள், அரசின் வரவு-செலவில் ஒழுக்கம் மிக்க கட்டுப்பாடுகள் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டு, முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொருளாதாரத்தை மீட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப உதவின. பண்டங்கள் மீதான வரி அளவு குறைக்கப்பட்டது (2013-இல் சராசரியாக எல்லா பொருள்களுக்கும் 12% தான் வரி விதிக்கப்பட்டது), வரியல்லாத பிற வகை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ‘காட்’ (GATT) என்று அழைக்கப்படும் வர்த்தகம் – வரிகள் தொடர்பான பொது (உலக) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது, உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ- WTO) உறுப்பினராக இணைந்தது. தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் சிறைப்படுத்தப்படாமல், சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியர்கள் அதன் பிறகு ஒப்புக்கொண்டார்கள் என்று நம்பிக்கையோடு சொல்ல முடியும்.
கட்டுப்பாடுகளற்ற பொருளாதார நடவடிக்கைகளை வளரும் நாடுகள் ஏற்ற அதேநேரத்தில், அதுவரை கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த வளர்ந்த நாடுகள், தங்களுடைய உள்நாட்டுத் தொழில் – வியாபாரத்தைக் காக்க, காப்பு வரிகளை விதிக்கும் ‘காவல்நாயக’ நாடுகளாகின. அதிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கிறது.
இடைக்கால நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக சில காப்பு நடவடிக்கைகளை எடுப்பது வேறு, காப்பு வரிக் கொள்கையையே அதிகாரப்பூர்வ பொருளாதாரக் கொள்கையாக நடைமுறைப்படுத்துவது வேறு. உயர் விகித இறக்குமதி வரி, வெளிப்பார்வைக்கு எளிதில் புலப்படாத வரியற்ற நடவடிக்கைகள், இறக்குமதியை ஊக்குவிக்காத வகையிலான செயல்பாடு, எல்லா நாட்டுடனும் ஏற்றுமதி -இறக்குமதி அளவு சமமாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம், அமெரிக்காவுக்கு வெளியே எந்த அமெரிக்க நிறுவனமும் உற்பத்தியாலைகளை நிறுவக்கூடாது என்ற மிரட்டல் ஆகியவற்றை வெட்கமே இல்லாமல் வலியுறுத்துகிறார் டிரம்ப். இவற்றின் மூலம், தான் விரும்பும் வளர்ச்சியையும் மகோன்னதத்தை அமெரிக்கா மீண்டும் பெற்றுவிடும் என்று நம்புகிறார்.
அரசின் கொள்கையிலேயே வினோதமான நம்பிக்கைகளுக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அமெரிக்காவுக்குத் தாள் பணிந்து நடக்கும் நாடுகளுக்குச் சாதகமாகவும், கனடா போன்ற எதிர் கருத்துள்ள நாடுகளுக்கு பாதகமாகவும் நடந்துகொள்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று தவறாகப் பிரசாரம் செய்கிறார். இறக்குமதியாகும் பொருள்கள் மீது வரிகளை உயர்த்தினால் அதை ஏற்றுமதியாளர்கள்தான் சுமப்பார்கள் – அமெரிக்க நுகர்வோர்களுக்கு வரிச் சுமை ஏற்படாது என்று வியப்பளிக்கும் வகையில் விளக்கம் அளிக்கிறார். பொருளாதார உற்பத்தியின் இன்றியமையாத அம்சங்களாக விளங்கும் நாடுகளுக்கு இடையில் உற்பத்திக்கு சாதகமாகவும் – பாதகமாகவும் இயல்பாக உள்ள அம்சங்கள், சில வகை உற்பத்திகளில் சில நாடுகளுக்கிருக்கும் சிறப்புத் தன்மைகள், வேலையைப் பிரித்துச் செய்வதில் உள்ள தொழில் பகுப்பு லாபம், உற்பத்திக்குத் தேவையான இடுபொருள்களையும் துணைப் பொருள்களையும் அளிக்கும் ‘வழங்கு சங்கிலிகள்’ ஆகியவை முக்கியமே அல்ல என்று கருதுகிறார்.
அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை வெளிநாடுகளில் மூடிவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டு வந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று பித்து பிடித்தவரைப்போல கட்டாயப்படுத்துகிறார். அதை ‘மீள் கரையேற்றம்’ என்று அழைக்கிறார்.
‘அமெரிக்க உற்பத்தியை மீண்டும் அமெரிக்க மண்ணுக்கே கொண்டுவர வேண்டும் என்று சொல்வது எளிது – ஆனால் நிறைவேற்றுவது மிகவும் கடினமானது’ என்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இதழான ‘தி ஹார்வர்ட் பிசினஸ் ரெவியூ’. ‘ஒரேயொரு உற்பத்தியாளர் தனது தயாரிப்புக்குத் தேவைப்படும் அனைத்தையும் தன்னுடைய ஆலையிலேயே வடிவமைத்து தயாரித்து, இணைத்து முழுப் பொருளாக தயாரித்து வெளியில் அனுப்பிய அந்தக் காலம் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது எதைத் தயாரிப்பதாக இருந்தாலும் அதன் உள் உறுப்புகளையும் துணை உறுப்புகளையும் மிகவும் விலை மலிவாகவும் தரமாகவும் அதிக எண்ணிக்கையிலும் தயாரிக்கும் சிறு நிறுவனங்களிடம் வாங்கி இணைத்து முழுமையடையச் செய்வதுதான் இப்போதைய உற்பத்தி முறை. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருப்பதுடன் மிகவும் நுட்பமானதாகவும் மாறிவிட்டது. எல்லாவற்றையும் ஒரே கூரையின்கீழ் செய்வது இனி எளிதல்ல, அவசியமும் அல்ல’ என்கிறது பிசினஸ் ரெவியூ.
‘டொனால்ட் டிரம்ப் அதிக விவரமில்லாதவர்; இருபத்தோராவது நூற்றாண்டின் தொழில் உற்பத்தி முறை எப்படிப்பட்ட அமைப்புகளைக் கொண்டிருக்கிறது, அதன் சிக்கல்கள் என்ன என்று அவருக்குத் தெரியாது’ என்கிறார் அமெரிக்கப் பொருளாதார அறிஞரும் பொது ஆட்சியியல் விமர்சகருமான ஜெஃப்ரி சாக்ஸ்.
தன் முன்னால் மண்டியிட்ட ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு குறைந்த விகித இறக்குமதி வரி விதித்தும், எதிர்ப்பில் உறுதி காட்டிய கனடா, பிரான்ஸ், பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளைத் தண்டிக்கும் வகையில் அதிக விகிதத்தில் வரி விதித்தும் - காப்பு வரியையே ஆயுதமாக்கியிருக்கிறார் டிரம்ப். இந்தியா முதலில் நண்பனா – எதிரியா என்று தீர்மானிக்கப்படாத பட்டியலில்தான் இருந்தது, இந்திய உருக்கு அலுமினியம், தாமிரம் (செம்பு) ஆகியவற்றின் மீது கடுமையாக இறக்குமதி வரி விதித்தார் பிறகு இந்தியப் பொருள்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான இறக்குமதி வரி 50% என்று அறிவித்துவிட்டார் (சிலவற்றுக்கு விலக்கும் - சிலவற்றின் மீது சிறிது காலம் கழித்து அமல் என்றும் விதித்திருக்கிறார்). ரஷியாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கான அபராதமும் இதில் அடக்கம். ‘உரிய பதில் நடவடிக்கைகளுடன் இந்த வரி விதிப்பை எதிர்கொள்வோம்’ என்று இந்தியா பதில் அளித்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு இந்தியாவால் அடிபணிய முடியாது என்பது வெளிப்படை. அதே சமயம் அமெரிக்காவுக்கு எதிராக வீம்புடன் நடப்பதும் அவசியமில்லை. இந்த வரி விதிப்புகள் தொடர்பாக பேசத் தயாராக இருக்கிறோம் என்று தெளிவாக அறிவித்துவிட வேண்டும்; அந்தப் பேச்சு சிக்கலாகவும் நீண்ட காலத்துக்கு நீடிப்பதாகவும் இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தியாக வேண்டும். பொருளாதாரத்தின் இயற்கை விதிகளே டிரம்பை, அவருடைய முடிவுகளை மாற்றிக்கொள்ளச் செய்துவிடும். காப்பு வரி விதிப்பை ஆயுதமாக்குவது தவறு என்பது அவருக்குப் புரிந்துவிடும். இறக்குமதியாகும் பொருள்கள் மீது வரியை அதிகப்படுத்தினால் அது விலையை பல மடங்கு உயர்த்தி அமெரிக்க நுகர்வோர்களைத்தான் கடுமையாக பாதிக்கும். அமெரிக்காவில் பணவீக்கம் (விலைவாசி) அதிகரிக்கும். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள ஆலைகளை மீண்டும் தாய்நாட்டுக்கே கொண்டுவர எண்ணினாலும், அதைச்செயல்படுத்த மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காது. அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியே மேலும் வேகமிழக்கும். 2026-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் ஆணவத்தை சற்றே குறைக்கும்.
இனியும் இந்தியா, ‘சில வகைப் பொருள்களை – சில சந்தைகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யும்’ நாடாக சோம்பலுடன் தொடர முடியாது. ஏற்றுமதிகள் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். நம்முடைய உற்பத்திப் பொருள்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். அமெரிக்க இறக்குமதித் தடையால் நாம் இழக்கவிருக்கும் 4,500 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு புதிய விற்பனைச் சந்தைகளை தேடிப்பிடிக்க வேண்டும். அன்னிய நேரடி முதலீடு பெருக, இப்போது கடைப்பிடிக்கும் விதிகளைத் தளர்த்தியாக வேண்டும். குறுகிய காலத்துக்கு, ஏற்றுமதியாளர்களுக்கு சில ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். ஏற்றுமதி பெருகுவதற்கு உதவியாக நம்முடைய செலாவணி மாற்று மதிப்பைக்கூட குறைப்பதற்கு பரிசீலிக்கலாம். இதனால் இறக்குமதிக்காகும் செலவும் நிச்சயம் அதிகரிக்கும். தேவையற்ற இறக்குமதிகளுக்குத் தற்காலிகமாக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
வெளியுறவுக் கொள்கையில் முதலில் நாம் படித்தாக வேண்டிய பாடம் என்னவென்றால், நட்புக்காக நாம் முதலில் முதுகை வளைத்தால், பிறகு முழந்தாள் மடித்து முட்டி போட வேண்டும், பிறகு தவழ்ந்தும் செல்ல வேண்டியிருக்கிருக்கும். டிரம்புடன் தொடக்க காலத்தில் மோடி இந்தப் பாடத்தை மறந்து, மிகுந்த நெருக்கம் காட்டினார். இப்போது அவரிடமிருந்தே ‘எதிர்ப்பு அறிகுறிகள்’ தெரிவது பாராட்டத்தக்கது. இந்தியா தன்னுடைய நாட்டு நலனில் உறுதியாக இருக்கும், தனது நலன்களை கட்டிக்காக்கும், நியாயமான வர்த்தக உறவை திறந்த மனதுடன் வரவேற்கும், நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும் இருதரப்புக்கும் அதிக பலன்களைத் தரக்கூடிய வகையில் வர்த்தக உடன்பாடு குறித்துப் பொறுமையாக பேச்சு நடத்தி தீர்வு காணும் என்பதை அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.