மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து பா.சிதம்பரம் கருத்து web
இந்தியா

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம்| ”மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்..” - பா.சிதம்பரம்

20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட காந்தி 100 நாள் ஊரக வேலை திட்டத்தின் பெயர் மற்றும் கொள்கையை மாற்றும் மசோதாவை அறிமுகப்படுத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம்.

Rishan Vengai

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பா.சிதம்பரம், காந்தியின் பெயரை நீக்குவது அவரது மரணத்தை மீண்டும் நிகழ்த்துவது எனக் கூறியுள்ளார். சோனியா காந்தி, ஏழைகளின் நலன்களை பாஜக அரசு புறக்கணிக்கிறது எனக் கண்டனம் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

அதன்படி, கிராமப் புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ”மகத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற இத் திட்டத்தின் பெயரை ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) என மாற்ற முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டிருக்கிறது. மேலும், இத்திட்டத்தின் கொள்கைளிலும் பல மாற்றங்களை ஆளும் பாஜக அரசு செய்திருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

இந்தநிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கும், அதில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் திட்டக் கொள்கைகளுக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இத்திட்டத்தில் பாஜக அரசு செய்திருக்கும் மாற்றங்கள் முதன் முதலில் இந்த திட்டம் கொண்டு வந்ததன் அடிப்படை நோக்கத்தை கெடுப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2வது முறையாக காந்தி கொல்லப்பட்டார்..

VB–G RAM G மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் பதிவிட்ட பதிவில், ஏழைகள் நலன்கள் மீது புல்டோசர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இனி யாருக்கு வேலை வழங்கப்படும், எவ்வளவு வேலை, எங்கு, எந்த முறையில் என்பதையெல்லாம், நிலைமையை நேரில் அறியாத டெல்லியில் அமர்ந்திருக்கும் அரசு தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்தசூழலில் முன்னாள் நிதியமைச்சரான பா.சிதம்பரம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு வைத்துள்ள பெயர் காந்தியை விட பொருத்தமான பெயரா? என கேள்வி எழுப்பினார். மேலும் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 77 ஆண்டுகளுக்குப் பின் மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.