பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தும் திட்டத்தில் தீவிரமாக செயல்படுகிறது. மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை குறிவைத்து, திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவை குறைக்க முயற்சிக்கிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்ற தேசிய தலைவர்கள் மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெற்ற வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் பாஜக, அடுத்து மேற்கு வங்கத்தைக் குறி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக விளங்கும் மேற்கு வங்கமும் ஒன்று. 2011 முதல் ஆட்சியில் இருக்கும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒடிசாவில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கையும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலையும் வீழ்த்தியதுபோல், தற்போது மம்தாவையும் வீழ்த்துவதற்கு இப்போதே பாஜக அதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அம்புகளை மம்தா மீது எரியாமல் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது எரிய காத்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது. அதாவது, அபிஷேக் பானர்ஜியின் தலைமையை ஏற்க விரும்பாத திரிணமூல் காங்கிரஸ் சேர்ந்தவர்களைக் குறிவைப்பதே பாஜகவினரின் இலக்காக இருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை தன் பக்கம் வளைத்து, அக்கட்சியின் அடித்தள ஆதரவைக் குறைப்பதே பாஜகவின் இலக்கு.. காங்கிரஸை ஒவ்வொரு தேர்தலிலும் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் எனும் குற்றச்சாட்டுகளின் மூலமாகவே காலி செய்யும் பாஜக, வரும் தேர்தலிலும் மம்தாவுக்கு எதிராக இதே செயலில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு தேர்தல் அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல், அடுத்த மாதத்தில் இருந்தே மேற்கு வங்கத்திற்கான தேர்தல் பணிகளைத் துவங்க இருக்கிறது பாஜக. தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு தேதியை அறிவிக்கும் வரை, மாதத்திற்கு இரண்டு பெரிய பொதுக்கூட்டங்களையாவது நடத்தும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் பாஜகவினர். அதுவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜகவின் தேசியத் தலைவர்களே பெரும்பாலும் கலந்து கொள்வார்கள் என்றும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். கங்கை பீகாரில் இருந்து வங்காளத்திற்குள் பரவுவது போல், பாஜகவின் வெற்றி அணிவகுப்பும் புனித நதியைப் பின்பற்றி 'தீதி'யை (மம்தா பானர்ஜி) அடித்துச் செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஒடிசா (2024) மற்றும் பீகார் (2025) ஆகிய இடங்களில் தொடர்ச்சியான வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு, “2024-ல் ஒடிசா, 2025-ல் பீகார்… 2026-ல் பெங்கால்!” என்று தனது புதிய முழக்கத்தையும் பாஜக கூர்மைப்படுத்தியுள்ளது. தேர்தலின் ஆரம்ப கட்டத்திலேயே பாஜகவின் தேசிய தலைமையே நேரடியாகக் களமிறங்குவது மேற்கு வங்க அரசியலை கொதிநிலையில் வைத்திருக்கிறது.
இன்னொரு புறம், பீகாரில் குறிப்பிட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை சரியான முறையில் ஒன்றிணைத்து அதன்மூலம் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றது. ஆனால், மேற்கு வங்கத்தில் சாதிய ரீதியிலான அரசியல் பெருமளவில் எடுபடாது என்பதால் பாஜக வேறொரு வியூகத்தை வகுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனதெரிவிக்கின்றன.
வங்கத்தின் மக்கள்தொகையில் தோராயமாக 30 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மாணிக்கும் சக்தியாக அவர்கள் இருக்கும் நிலையில், அந்த வாக்குகள் பெரும்பாலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே செல்கிறது. அதை மையமாகக் கொண்டு இந்து சமூக மக்களது வாக்குகளை ஒன்றிணைக்கும் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக NDTV தளத்தில் வெளியாகியிருக்கும் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கடுத்து, பாஜக வங்கதேச குடியேறிகளின் விவகாரத்தையும் கையிலெடுக்க உள்ளது. அது, சமீபகாலமாக அங்கு எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதற்குத் தகுந்தபடி, வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகளும் அங்கு தீவிரமடைந்துள்ளன. இவற்றையெல்லாம் கையில் எடுக்க நினைக்கும் பாஜக, இந்த முறை எப்படியும் 160-170 இடங்களில் வெல்லக் குறிக்கோள் நிர்ணயித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாள்தோறும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். பாஜகவிற்கு எதிரான கட்சி என்பதை உறுதிப்படுத்துவதோடு அல்லாமல் நாள் தோறும் அதற்கான காரணங்களையும் அதற்கான அடித்தளத்தையும் விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். பாஜக இம்முறை அத்தனை எளிதான விஷயமாக இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநிலத்தில் திரிணாமுலுக்கு அடுத்து அதிகப்படியான வாக்கு சதவிகிதத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியே வைத்திருக்கிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்ளில் பாஜக 77 இடங்களையும் 38.14 வாக்குச் சதவீதத்தையும் பெற்றுள்ளது. அதே தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 219 தொகுதிகளையும் 48 வாக்குச் சதவிகிதத்தையும் பெற்றிருந்தது. அந்த வகையில் பார்க்கப்போனால், பாஜகவுக்கு இன்னும் 10 சதவிகிதமே தேவைப்படுகிறது.
மேலும் பாஜக, மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக கடந்தகால தேர்தல் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இதையடுத்து, வரும் தேர்தலில் மம்தாவை வீழ்த்தும் நோக்கில், இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டாயம் செயல்படுத்தும் நோக்கில் பாஜகவின் பணி இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக, வேட்பாளர்களை நிறுத்தும் பணியிலும் பாஜக கூடுதல் கவனம் செலுத்தும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.