மேற்கு வங்கம் | மொழி காக்கும் போராட்டம்.. தொடங்கிய மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மொழி காக்கும் போராட்டத்தை நாளை முதல் தொடங்க உள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் மம்தா பானர்ஜி அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறார். இந்த முறை வங்க மொழி மக்களை காக்கும் போராட்டத்தை தேர்தல் ஆயுதமாக அவர் எடுத்துள்ளார். வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் வங்கமொழி பேசும் அனைத்து மக்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் குறிவைக்கப் படுகின்றனர் என்பதே மம்தாவின் தற்போதைய குற்றச்சாட்டு.
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர் என குற்றம்சாட்டும் மம்தா, அவர்களை காப்பதற்காக எனக்கூறி மொழி போராட்டத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலமெங்கும் கூட்டங்கள் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையே வங்கமொழி பேசும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் மம்தா பதிவிட்டுள்ளார். அதே நேரம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருடுபவர்களை மொழியின் பெயரால் மம்தா பானர்ஜி பாதுகாப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் வங்கமொழியை மையமாக வைத்து மேற்கு வங்கத்தில் அரசியல் அனல் தகிக்க தொடங்கியுள்ளது.