கேரள மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அதிர்ச்சி அளித்தது. அதேபோல மாநிலம் முழுவதும் பரவலாக பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே அங்கு தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஒரு பஞ்சாயத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் மட்டத்தூரில் உள்ள பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி உறுப்பினர்கள் 10 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அதேபோல சுயேச்சைகள் 2 பேர் வெற்றிபெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மட்டத்தூர் பஞ்சாயத்து தலைவரை தேர்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதே நேரம் பாஜகவில் இணைந்தவர்கள் சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்று மட்டத்தூர் பஞ்சாயத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
பாஜக சார்பில் சுயேச்சை உறுப்பினர் டெசி ஜோஸ் கல்லரக்கல் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மட்டத்தூரில் நீண்டகாலமாக நீடித்து வந்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று டெசி ஜோஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.