வங்கத்துச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிறந்தது இன்றைய ஒடிசாவின் கட்டாக் நகரில். 1897 ஜனவரி 23ஆம் தேதி, 14 பேர் கொண்ட பெருங்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்த சுபாஷ் சந்திர போஸ், படிப்பில் படு சுட்டி. ஆனால், தாயார் பிரபாவதியின் அதீத கடவுள் நம்பிக்கையின் தாக்கத்தால், 16 வயதிலேயே ஆன்மிக குருவைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறினார். புத்திமதி சொல்லி அவரை உயர் கல்வியின் பக்கம் திருப்பினார் வழக்கறிஞரான தந்தை ஜானகிநாத் போஸ். படிக்கப் போன இடத்தில், நேதாஜியை போராளியாக்கியது. அவரது கல்லூரி பேராசிரியரான சி.எஃப்.ஓட்டனின் இனவெறி. ஆங்கிலேயரான அவர், இந்தியர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேச, வெகுண்டெழுந்தார் போஸ். அந்த ஆங்கிலேயரின் ஆதிக்க வெறிக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்ததால், கல்லூரியைவிட்டே நீக்கப்பட்டார்!
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வழக்கறிஞருக்குப் படித்தவர்கள்தான் அதிகமாக அரசியலுக்கு வந்தார்கள். நேதாஜியோ கலெக்டர் பதவிக்கான ஐசிஎஸ் படிப்பை உதறிவிட்டு, அரசியலுக்கு வந்தவர். மகன் போராளியாகி விடக்கூடாது என்றுதான் ஐசிஎஸ் படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்தார் தந்தை. ஆங்கிலேயனுக்கு கீழெல்லாம் அடிபணிந்து வேலை செய்ய முடியாது எனக் கருதிய சுபாஷ், தனது அரசியல் குருவான சித்தரஞ்சன் தாஸின் ஆலோசனைப்படி, அந்தப் படிப்பை உதறித்தள்ளிவிட்டு, தாயகம் திரும்பினார். வந்த வேகத்தில் காந்திஜியை நேரில் சந்தித்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நேதாஜியின் திறமையை நன்கு அறிந்திருந்த சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக அவரை நியமித்தார். 25 வயதே நிரம்பிய நேதாஜி, கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சியை ஊட்டியதுடன் காங்கிரஸ் தொண்டராகவும் பணியாற்றினார். 1922 இல் இந்தியா வந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்க, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தீவிரம் காட்ட, அதற்கு எதிரான அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் காந்தி. கல்கத்தா தொண்டர் படையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நேதாஜி, இளவரசருக்கு எதிரான போராட்டத்துக்கு தீவிரமாக தயாரானதால், அவரைக் கைது செய்து 6 மாத காலம் சிறையில் அடைத்தார்கள் ஆட்சியாளர்கள். தொண்டராக இருந்து தலைவராக உயர்ந்ததை அங்கீகரிக்கும் வகையில் அவரை முதலில் நேதாஜி என்றழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
காந்திஜி மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த நேதாஜிக்கு, அவரது அகிம்சை வழி அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. அதிரடியாக ஏதாவது செய்து ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட முடியும் என்றே அவர் நினைத்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கை கண்டித்து காந்தி அறிக்கை வெளியிட்டபோது, நேதாஜியோ பாராட்டுப் பத்திரம் வாசித்தார். 1928 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் காந்தியின் முடிவுக்கு எதிராக முழங்கி, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார்.
இந்த முரண்பாடுகள் காரணமாக, 1939 காங்கிரஸ் தலைவர் தேர்தலில், நேதாஜிக்கு அமோக ஆதரவு இருப்பது தெரிந்தும், அவருக்கு எதிராக பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்தி. அதில் நேதாஜி அமோக வெற்றிபெற்றார். நேதாஜியின் தீவிரப்போக்கு காங்கிரஸை விபரீதப்பாதை நோக்கித் திருப்பிவிடும் என்று அஞ்சிய காந்தி, பட்டாபியின் தோல்வியைத் தன்னுடைய தோல்வியாகக் கருதுவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் தலைவர் பதவியைத் துறந்தார் நேதாஜி.
நேருவுக்கும் நேதாஜிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பெரிய குடும்பத்துப் பிள்ளைகள்… வெளிநாட்டில் பயின்றவர்கள். இருவரின் தந்தையும் வழக்கறிஞர்கள். காங்கிரஸுக்குள் இருக்கும் இடதுசாரிகள் என்ற விமர்சனத்துக்கு ஆளானவர்கள். காங்கிரஸில் நேருவும், நேதாஜியும்தான் நவீன சிந்தனை கொண்டவர்கள் என்ற எண்ணம் காந்திக்கேகூட இருந்தது. இருவருக்கும் இடையே தனிப்பட்ட நட்பும் இருந்தது. காசநோயால் பாதிக்கப்பட்ட கமலா நேரு ஜெர்மனியின் சிகிச்சை பெற உதவிய நேதாஜி, ஸ்விட்சர்லாந்தில் கமலா மரணமடைந்தபோது நேருவுடன் இருந்தவர். தேச விடுதலை என்ற இலக்கில் ஒன்றுபட்டாலும், அதற்கான பாதை மிதவாதமா தீவிரவாதமா என்பதில் முற்றிலும் வேறுபட்டார்கள். ஆனாலும், காந்தியே சொல்லியும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜியை எதிர்த்துப் போட்டியிட மறுத்தார் நேரு. அதேபோல தன் ஐஎன்ஏ படையின் ஒரு பிரிவுக்கு நேருவின் பெயரைச் சூட்டினார் நேதாஜி.
”வன்முறை மோசமானதுதான்… ஆனால், அடிமைத்தனம் அதைவிட மோசமானது! ” என்ற கருத்தைக் கொண்டிருந்த நேதாஜி, இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டனை தோற்கடிப்பதன் மூலம் இந்தியாவை விட்டு அவர்களை விரட்டியடிக்கலாம் என்று நம்பினார். அதற்காக இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்தவர், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி ஆகியோரைச் சந்தித்து ஆதரவு பெற்றார். அவர்களின் கூட்டாளியான ஜப்பான் ராணுவம், பிரிட்டனிடமிருந்து கைப்பற்றிய மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் ஐஎன்ஏ-வின் இயங்கு தளமானது. 1943-ம் ஆண்டு சிங்கப்பூரில் வைத்து, ஆஸாத் ஹிந்த் (விடுதலை இந்தியா) எனும் நாடு கடந்த சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார் நேதாஜி. அவருடைய இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து விடுதலை வீரர்களை அனுப்பிய பெருமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும், பெண்கள் படைக்குத் தலைமை தாங்கிய பெருமை கேப்டன் லட்சுமிக்கும் உண்டு. “அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன்” என்று நெகிழும் அளவுக்கு வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆதரவும் நேதாஜிக்கு இருந்தது.
1934ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்குச் சென்ற நேதாஜி, 23 வயதான எமிலி செனகலுடன் காதல் வயப்பட்டார். 'இந்தியாவின் துயரம்' என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகத்தை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வந்தவர்தான் எமிலி. அவர்களின் காதல் வாழ்க்கையின் பரிசாக 1937இல் மகள் அனிதா போஸ் பிறந்தார். போஸ் தனது காதல் மனைவி எமிலிக்கு அனுப்பிய கடித்ததில், "அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று தன் நேசத்தை வெளிப்படுத்தினார்.
1945 ஆகஸ்ட் 15இல் நிகழ்த்திய உரையில், "இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" என்று உறுதியாகச் சொன்னார் நேதாஜி. அவர் சொன்னது போலவே இரண்டு ஆண்டுகள் கழித்து அதே நாளில் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால், அந்த கொண்டாட்டத்தில் அவர் இல்லை. 1945 ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்றபோது விமான விபத்தில் இறந்ததாக ஜப்பான் செய்தி நிறுவனம் அறிவித்தது.
நேதாஜியுடன் விமானத்தில் பயணம் செய்து, படுகாயத்துடன் உயிர் தப்பியவராக கருதப்படும் ஹபிபுர் ரஹ்மானோ, நேதாஜி உடல்தகனம் செய்யப்பட்டதை தான் கண்ணால் பார்த்ததாகக் கூறினார். ஆனால், தைவானோ அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்றது. பார்வர்டு பிளாக் தலைவர்களும் நேதாஜி உயிருடன்தான் இருக்கிறார் என்றார்கள். நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்கள் அமைத்த விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தெரிவித்தன. நேதாஜி இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவரது நினைவுகள் இந்திய இளைஞர்களின் இதயத்தில் இறவாப் புகழுடன் நிலைத்திருக்கின்றன.