“நாளை மகிழ்ச்சியான செய்தி” டெல்லிக்கு சென்ற போராட்டக்காரர்கள் யார்? அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்
டெல்லி சென்ற போராட்டக்குழு
டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதப்படும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த சில வாரங்களாகவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரிக்கை வைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.
இதனையடுத்து மேலூர் பகுதியைச் சேர்ந்த மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு மற்றும் ஆனந்த் உள்ளிட்டோரும், பாஜக நிர்வாகிகள் மகா சுசீந்திரன், பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன், ராஜசிம்மன், பாலமுருகன் உள்ளிட்ட11 பேர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
”டெல்லி சென்றவர்கள் போராட்டக்குழுவினர் அல்ல”
முன்னதாக அரிட்டாபட்டியை சேர்ந்த சிலர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “அண்ணாமலை வள்ளாலப்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஒருபோக சாகுபடி விவசாயிகளை ஒருங்கிணைத்து நீங்களாகவே முடிவெடுத்து ஐந்து விவசாயிகளை அனுப்பி வையுங்கள் எனக் கூறினார். அதுதொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர்களை அசிங்கப்படுத்துவதுபோல, இதுவரை எந்த தகவலும் இல்லை, நாங்கள் காத்திருக்கிறோம். இப்போது இந்த போராட்டத்தில்க் வேலைபார்க்காத ஆட்களை எல்லாம் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். எந்த விதத்தில் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக நாமும் விசாரித்தோம். முல்லைப் பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம்தான், மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தினை நடத்திச் செல்வது என விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் போராட்டக் களத்திற்கு வந்திருந்த அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தினை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக விவசாயிகளை அழைத்துச் செல்வதாக தெரிவித்திருந்தார்.
8க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் போராட்டம் செய்த நிலையில், குறிப்பாக வள்ளாலப்பட்டி எனும் ஊரில் இருந்து மட்டும் பாஜகவுக்கு ஆதரவான 7 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழைத்துச்சென்றதாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. சங்கத்தினைச் சார்ந்த தலைவரோ, பொருளாளரோ, நிர்வாகிகளோ அல்லது போராட்டத்தில் முன்நின்று களமாடியவர்களையோ யாரையும் அழைத்துச் செல்லவில்லை என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று இதுதொடர்பாக பேட்டி அளித்தவர்களும் இந்த சங்கத்தினைச் சார்ந்தவர்கள்தான் என்கின்றனர் களத்தில் இருந்தவர்கள்.
நாளை மகிழ்ச்சியான செய்தி
இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்தித்தனர். இந்த திட்டம் அமைக்கப்பட்டால் அந்த பகுதி எவ்வளவு பாதிக்கும் என்பது விளக்கப்பட்டது. இதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி GSI இந்த பகுதியில் டங்ஸ்டன் இருப்பதாக ரிப்போர்ட் ஒன்றைக் கொடுக்கிறார்கள். அதன்பின் மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்திற்கு பதில் எழுதியபோதுகூட, இத்திட்டத்தினை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு வைக்கவில்லை.
அதன்பிறகுதான் ஏலத்திற்கு செல்கிறது. 2024 நவம்பர் 7 ஆம் தேதி தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்தபிறகு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு பாஜக சார்பில் உடனடியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்தித்து திட்டத்தினை நிறுத்தி வைத்தது. இன்று கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி நாளை வர இருக்கிறது. அமைச்சர் கிஷன் ரெட்டி நேரடியாக பிரதமரை இன்று சந்தித்துப் பேசி நாளை மிக மிக மகிழ்ச்சியான செய்தி வர இருக்கிறது. பாஜகவினர் மக்களுக்கு என்ன உறுதிமொழி கொடுத்தோமோ அதைக் காப்பாற்றி இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடன் ஏற்கனவே பல தரப்பிடம் இருந்தும் மனு அளிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.