சத்தீஸ்கரில் விஷ்னு தியோ சாய் தலைமையிலான பாஜக அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஆயுதம் தாங்கிப் போராடும் நக்சலைட்டுகளை ஒழிக்கவும், அவர்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்பவும், இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நக்சல் வன்முறைகளில் போராடி உயிர்நீத்த ராணுவ வீரர்களையும், வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து உரையாற்றினர்.
அதில், மார்ச் 31, 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இருந்து நக்சலைட்டுகளை ஒழிக்க வேண்டும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த மாநிலத்தில் 287 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரம் நக்சலைட்டுகளை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். 837 நக்சலைட்டுகளை சரணடைந்துள்ளதாகவும் அமித் ஷா கூறியிருந்தார். இந்த எண்ணிக்கை கடந்த 24 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் நக்சலைட்டுகள் தொடர்பாக பேசுகையில், “சரணடைந்த நக்சலைட்டுகள் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 ஆயிரம் வீடுகளை வழங்குகிறோம். திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்குகிறோம்” என்று தெரிவித்திருந்தார். நக்சல்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் சத்தீஸ்கர் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் மூன்று கிராமவாசிகளை கொன்றதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற இருவரையும் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் அச்சத்தின் காரணமாக தகவல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், சடலங்கள் ரகசியமாக அடக்கமும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்தான தகவல் கிடைத்த நிலையில், இரு குழுக்கள் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் கன்கேர் மாவட்டத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பிரபாகர் ராவ் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதான பிரபாகர் ராவ் தளவாட விநியோக செயல்பாடுகளில் முக்கியப் புள்ளியாக இருப்பவர். மேலும், மாவோயிஸ்ட்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களான கணபதி, பஸ்வ ராஜூ, கோசா, மல்லராஜா ரெட்டி போன்றவர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவராகவும் அறியப்படுபவர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சத்தீஸ்கர், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்பட்டவர்.