அரசு ஆரம்பப்பள்ளியில் தொடங்கிய பயணம், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தியிருக்கிறது. இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதை அவரது சொந்த ஊர் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாகர்கோவில் அருகே மேலகாட்டுவிளையைச் சேர்ந்த வி. நாராயணன், தனது பள்ளிப்படிப்பை கீழ காட்டுவிளை அரசு ஆரம்பப் பள்ளியில்தான் தொடங்கினார். சிறு கிராமத்தில் உள்ள இந்த பள்ளியின் ஆசிரியர்கள், இப்போதுள்ள மாணவ, மாணவியருக்கு நாராயணனை பற்றிக் கூறி பெருமையாக உற்சாகமூட்டிவருகிறார்கள்.
நாராயணனின் சொந்த ஊரான மேல காட்டுவிளை கிராமமும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. சிறு வயது முதல் ஏழ்மையான சூழலில் வாழ்ந்ததையும் கடின உழைப்பை கொண்டு முன்னேறியதையும் நினைவு கூரும் உறவினர்கள், மிக எளிமையாக, எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் பழகும் நபர் என நாராயணனுக்கு புகழாரம் சூட்டினர்.
40 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய நநாராயணன், கரக்பூர் ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றவர். இஸ்ரோவின் ஜிஎஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட்டத்திற்கு CE20 கிரையோஜினிக் என்ஜின் உருவாக்குவதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான ஆதித்யா விண்கலம் மற்றும் ஜி.எஸ்.எல்.வி.எம்.கே. 3 ராக்கெட் திட்டங்களிலும் பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார்.
இஸ்ரோவின் முன் உள்ள புதிய விண்வெளித்திட்டங்கள், விண்வெளியில் மிதக்கும் ஆராய்ச்சி மையம் அமைப்பது போன்ற திட்டங்களில் இவரின் தலைமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.