நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு | ட்ரம்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்பே, மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து ட்ரம்ப் போட்டியிட்டாா். ஆனால், அதிபர் தேர்தலுக்கு முன்பு, ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவுகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான ஸ்டோமி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) ட்ரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் ட்ரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை ட்ரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட34 பிரிவுகளில், குற்றச்சாட்டுகளை நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது.
மேலும், இந்த வழக்கில் ட்ரம்ப்புக்கான தண்டனை வரும் 10ஆம் அறிவிக்கப்படுவதாக உள்ளது. இந்த நிலையில்தான், அதனை எதிா்த்து ட்ரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், ட்ரம்ப்பின் அந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த வழக்கில் ட்ரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பு பரபரப்பாக பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ட்ரம்ப் மேல்முறையீடு செய்யமுடியும் எனக் கூறப்படுகிறது.