சீன மொழியில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்!
மோகன் ராஜா இயக்கத்தில் உருவான படம் `வேலைக்காரன்'. தனிஒருவன் வெற்றிக்குப் பிறகு ராஜா இயக்கும் படம், சிவகார்த்திகேயன் நடிக்கிறார், நயன்தாரா ஹீரோயின், ஃப்ஹத் பாசிலின் முதல் தமிழ் படம் என பல எதிர்பார்ப்புகளுடன் உருவானது படம். 2017ல் வெளியான இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. மேலும் உணவு கலப்படம் பற்றியும், முதலாளி - தொழிலாளி இடையேயான பேதம் பற்றியும் பேசியது இப்படம். பொதுவாக இதுமாதிரியான ஆக்ஷன் படங்கள் மற்ற மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். வேலைக்காரன் படமும் இந்தியில் `Ghayal Khiladi' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, பிரபல யூட்யூப் சேனலான Goldmines Telefilmsல் வெளியானது.
அதே நேரத்தில் சில படங்கள் சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அந்த இடத்துக்கு தகுந்த மொழியில் சப் டைட்டில் சேர்க்கப்பட்டு வெளியிடப்படும். சமீபத்தில் மகாராஜா படம் கூட இப்படியே வெளியாகி, அங்கு பெரிய ஹிட்டானது. அது ஒருபக்கம் இருக்க சில படங்கள் டப் செய்யப்பட்டு லோக்கல் கேபிள் சேனல்களில் திரையாகும். சில நேரம் அது உரிய உரிமைகள் பெற்று திரையாகும், இல்லாமலும் திரையாகும். அப்படி சீனாவில் ஒரு கடையில் ஓடிக் கொண்டிருந்தது சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' அதுவும் அந்த ஊரின் ஒரு லோக்கல் சேனலில், சீன மொழியில் டப் செய்யப்பட சீன மொழி வேலைக்காரன் வெர்ஷன்.
சீன மொழி டப் வேலைக்காரன் டிவியில் திரையானதை ஒருவர் வீடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட, அது இப்போது வைரலாக சுற்றி வருகிறது. சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் சீன மொழியில் ஒலிக்க, சிவாவே சீன மொழி பேசுவது போல் இருக்கிறது எந்த வீடியோ. இதில் ஹைலைட் என்னவென்றால், படத்தின் இயக்குநர் மோகன் ராஜா, இந்த வீடியோவின் கீழ் ஷாக்கான எமோஜி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். தான் இயக்கிய படம் சீன மொழியில் டப் ஆனதை பார்த்து அவரே ஷாக்காகியிருப்பார் போல. எது எப்படியோ SK இப்போது சீனாவரை பிரபலம் என்பது இதன் மூலம் தெரிகிறது.