2006ஆம் ஆண்டு மும்பையில் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பில் 189 பேர் இறந்த நிலையில் 800கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் முதலில் 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு ஒருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 12 பேர் விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த 12 பேரையும் விடுவித்துள்ள மஹாராஷ்டிரா உயர் நீதிமன்றம், 19 ஆண்டுகளாக நடந்த விசாரணையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷ்யாம் சந்தக் அடங்கிய சிறப்பு அமர்வு, கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத்தவறி விட்டதாக கூறி அவர்களை விடுவித்துள்ளது. “குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் வகையை கூட அரசு தரப்பு பதிவு செய்யத் தவறிவிட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க சான்றுகள் போதுமானதாக இல்லை” சிறப்பு அமர்வு தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்தது மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) என்பது குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட 12 பேரில் கமால் அன்சாரி, முகமது ஃபைசல், ஆசிஃப் கான் உட்பட 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள்தண்டனையையும் சிறப்பு MCOCA ( Maharashtra Control of Organised Crime Act) நீதிமன்றம் விதித்திருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் இறந்துவிட்டார். இந்நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பையில் புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் மிகுந்த மாலை நேரத்தில் 11 நிமிட இடைவெளியில் நடந்த 7 குண்டுவெடிப்புகளில் 189 பேர் உடல் சிதறி இறந்தனர். 827 பேர் காயமடைந்தனர். குண்டுகள் அனைத்தும் பிரஷர் குக்கர்களில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலின் பேரில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த கொடூர நிகழ்வு அப்போது நாட்டையே உலுக்கியிருந்தது.