மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணமான நிலையில் இருவரும் மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருவரும் திடீரென காணாமல் போயினர். சில நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மலைப் பள்ளத்தாக்கில் புதருக்குள் கடந்த 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதன்பின் சில நாட்கள் கழித்து மனைவி சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார். சோனமுக்கு வேறு ஒரு நபருடன் காதல் இருந்ததாகவும் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி கணவரை கொன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தம்பதியர் இருவரும் தங்க நகைகள் அனைத்தையும் அணிந்து வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்றதாக தெரிவித்துள்ளனர். சோனம் தனது பெற்றோரின் வீட்டிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்றதாகவும், ராஜா தனது வீட்டிலிருந்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து சென்றதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை தொடர்பாக சோனம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இக்கொலையில் தங்கள் மகளுக்கு தொடர்பு இருக்காது என்றும் மேகாலயா காவல்துறை இவ்வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென்றும் சோனமின் பெற்றோர் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷி தாயார் உமா, “சோனம் கொலையில் ஈடுபட்டிருந்தால், அவரைத் தூக்கிலிட வேண்டும். சோனம், சரணடைந்ததாக போலீசார்கூடச் சொல்லவில்லை. இந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சோனம் எதுவும் செய்யவில்லை என்றால், அவர் ஏன் குற்றம்சாட்டப்பட வேண்டும்? சோனம் நல்ல நடத்தை கொண்டவர். சோனம் உண்மையிலேயே எனது மகனை நேசித்திருந்தால், அவனை ஏன் இறக்க விட்டுச் சென்றிருக்க வேண்டும். சோனம் ரகுவன்ஷி மேகாலயாவிற்கு தேனிலவு பயணத்திற்கான அனைத்து முன்பதிவுகளையும் செய்திருந்தார். ஆனால் திரும்ப வருவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை. மேலும், என் மகனுக்கு அந்தப் பகுதி பற்றி தெரியாததால், அவர் ஷில்லாங்கிற்கான பயணத்தை நீட்டித்திருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, " ‘தனது நகைகளைப் பறிக்க முயன்ற ஒரு கும்பலிடமிருந்து தனது கணவர் தன்னைப் பாதுகாக்க முயன்றபோது கொல்லப்பட்டார்’ என சோனம் ரகுவன்ஷி கூறியதாக காஜிப்பூரில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். உதவிக்காக அவர் தன்னை அணுகியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, “எங்கள் மாநிலம் மிகவும் அமைதியானது. சுற்றுலாப் பயணிகளை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் நான்கு குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம். அவர்கள் அனைவரையும் மேகாலயாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவோம். இது, எங்கள் மாநிலம் மற்றும் அரசாங்கத்திற்கு அவதூறை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.