mallu bhatti vikramarka
mallu bhatti vikramarka file image
இந்தியா

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நாயகன்.. தெலங்கானாவின் டி.கே சிவக்குமார்.. யார் இந்த விக்ரமார்கா?

யுவபுருஷ்

தெலங்கானாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற நிலையில், ரேவந்த் ரெட்டி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர் மல்லு பட்டி விக்ரமார்கா துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, 3வதாக நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்ததில் ரேவந்த் ரெட்டிக்கு எத்தனை சதவீத பங்குள்ளதோ, அதே அளவுக்கு மல்லு பட்டி விக்ரமார்காவும் பங்களிப்பு செய்துள்ளார். பட்டியலின சமூகத்தில் பிறந்து மாநிலத்தின் துணை முதல்வரான விக்ரமார்காவின் அரசியல் பயணத்தை ஒருமுறை திரும்பி பார்க்கலாம்.

இப்போது எந்த தொகுதியில் நின்று வெற்றிபெற்றாரோ, அதே தொகுதியில்தான் முதன்முறையாக ஒருங்கிணைந்த ஆந்திராவில் 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் விக்ரமார்கா. அப்போதே ஆட்சியில் இருந்த காங்கிரஸின் தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார்.

1990ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தவர், 2009ம் ஆண்டு எம்.எல்.ஏ ஆனதற்கு பின் 2011ம் ஆண்டு வரை தலைமை கொறடாவாக பதவி வகித்தார். தொடர்ந்து, 2011 - 2014ம் ஆண்டு வரை துணை சபாநாயகராகவும் பதவி வகித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நம்பிக்கை நாயகனாக காங்கிரஸில் தன்னை உயர்த்திக்கொண்டார் விக்ரமார்கா.

2009 முதல் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரை மதிரா என்ற ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 4 முறையும் வெற்றிபெற்றுள்ளார் விக்ரமார்கா. அதுமட்டுமல்லாது காங்கிரஸின் தற்போதைய வெற்றிக்கு இவரது பாதயாத்திரை பெரும் பங்கு வகித்துள்ளது என்றால் அது மிகையல்ல. கட்சியின் மாநில தலைவராக ரேவந்த் ரெட்டி ஒருபுறம் பரப்புரை செய்ய, 1,400 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை மூலம் தெலங்கானாவில் சூறாவலியாக சுற்றிச்சுழன்றார் விக்ரமார்கா.

36 தொகுதிகளை உள்ளடக்கிய அந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பட்டியலினத்தவர், மாணவர்கள், சாமானியர்கள் என அனைவரது நெஞ்சிலும் கங்கிரஸை விதைத்தார் விக்ரமார்கா. 2019ம் ஆண்டில் சுமார் ஓராண்டு காலத்திற்கு கட்சியின் தலைவராக பதவி வகித்தவர், தற்போதைய வெற்றிக்கு வித்திட்டு மாநிலத்தின் துணை முதல்வராகவும் அமர்ந்துள்ளார்.

எழுத்து: யுவபுருஷ்