சஞ்சய் கெய்க்வாட் எக்ஸ் தளம்
இந்தியா

”தென்னிந்தியர்களால் தான்..” மீண்டும் சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து; யார் இந்த சஞ்சய் கெய்க்வாட்?

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய விஷயங்களால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

Prakash J

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய விஷயங்களால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில், மும்பையில் உள்ள ஒரு கேண்டீனில், உணவு ஊழியர் ஒருவரைத் தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இதற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சஞ்சய் கெய்க்வாட்

இந்த சர்ச்சைக்குப் பிறகு, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) குழு, அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய சென்றது. அப்போது, உணவகத்தை நடத்துவதற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்தது. இத்தனைக்குப் பிறகும், கெய்க்வாட் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காமல், தொடர்ந்து அதை மீண்டும் செய்யத் தயங்க மாட்டேன் என்று எச்சரித்தார். ”யாராவது இதுபோன்ற செயலை மீண்டும் செய்தால் நான் மீண்டும் அடிப்பேன். நிர்வாகம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகிறது. இது நடவடிக்கையில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. ஷெட்டி என்ற ஒப்பந்ததாரருக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது? அதற்குப் பதிலாக ஒரு மராத்தி நபரிடம் கொடுங்கள்.

நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். எங்களுக்கு நல்ல தரமான உணவைத் தருவார்கள். தென்னிந்தியர்கள் நடன பார்கள், பெண்கள் பார்களை நடத்தி மகாராஷ்டிராவின் கலாசாரத்தைக் கெடுக்கிறார்கள். அவர்கள் நம் குழந்தைகளைச் சீரழித்துவிட்டார்கள். அவர்கள் எப்படி நல்ல உணவை வழங்குவார்கள்" என சஞ்சய் கெய்க்வாட் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில், ”கேன்டீன் ஊழியர் ஒரு மராத்தியாக இருந்திருந்தால் அவர் வேறுவிதமாக எதிர்வினையாற்றி இருப்பாரா” என்று கேட்டதற்கு, பதிலளித்த கெய்க்வாட். "இது மராத்திகளைப் பற்றிய கேள்வி அல்ல. முதலாவதாக, மராத்திகள் இவ்வளவு தவறைச் செய்திருக்க மாட்டார்கள். மகாராஷ்டிர மக்கள் ஒருபோதும் நடனப் பார் அல்லது பெண்கள் பார் நடத்தியதில்லை. அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்ததில்லை. வெளியாட்கள் மட்டுமே இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். முன்னதாக பாலாசாகேப்பும் இவற்றை எதிர்த்தார்" எனப் பதிலளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

சஞ்சய் கெய்க்வாட்

புல்தானாவைச் சேர்ந்த இரண்டு முறை எம்.எல்.ஏவான கெய்க்வாட் சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. கடந்த ஆண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும், கடந்த ஆண்டு ஒரு வைரலான வீடியோவில், தன் காருக்குள் வாந்தி எடுத்ததை, போலீஸ்காரரை வைத்து சுத்தம் செய்ததிலும் அவர் சர்ச்சையை எதிர்கொண்டார். அதற்கு முன்னதாக, 1987ஆம் ஆண்டு ஒரு புலியை வேட்டையாடியதாகவும், அதன் பல்லை தனது கழுத்தில் அணிந்ததாகவும் எம்.எல்.ஏ. கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.