மகாராஷ்டிரா | ”இது சிவசேனா பாணி” - கேன்டீன் ஊழியருக்கு குத்துவிட்ட எம்.எல்.ஏ.!
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இந்த நிலையில், புல்தானா தொகுதியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், மும்பையில் உள்ள உள்ள ஒரு கேண்டீனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும், அதில் இருந்த பருப்பு துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அதிர்ந்துள்ளார். தவிர, இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இந்த உணவைத் தயாரித்தது யார் என அந்த கேண்டீனுக்குச் சென்று வினவியுள்ளார். இதுதொடர்பான அந்த வீடியோவில், "இதை எனக்கு யார் கொடுத்தது? இதை முகர்ந்து பாருங்கள். இதை பேக் செய்து உணவுத் துறைக்கு போன் செய்யுங்கள். இதை ஒரு எம்.எல்.ஏ-வுக்குக் கொடுக்கிறீர்கள், மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள்?" எனக் கேட்டுவிட்டு, இதை வழங்கிய ஊழியரான யோகேஷ் குத்ரானை அடிக்க அவர் தரையில் விழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர், இப்படி பொதுவில் நடந்துகொண்ட விதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக அவரிடம் NDTV கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், ”நான் பருப்புச் சாதம், இரண்டு சப்பாத்தி கேட்டேன். அதைச் சாப்பிட ஆரம்பிச்சு, கொஞ்ச நேரம் கழிச்சு வாந்தி வந்திடுச்சு. எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. கேன்டீனுக்குப் போனேன். நான் அதை மாற்றக்கூட சொல்லவில்லை. கேன்டீனுக்குப் போய், அதை முகர்ந்து பார்க்கச் சொன்னேன். அப்புறம் ரொம்ப மோசம்னு சொன்னேன். மேலாளரைக் கூப்பிட்டு, ’அது சாப்பிட சரியில்லை’ன்னு சொன்னேன். அவங்க வச்சிருந்த கோழி, முட்டை எல்லாம் ரொம்ப பழசா இருக்கு. அவங்க தினமும் ஆயிரக்கணக்கான பேரோட ஆரோக்கியத்துல விளையாடுறாங்க. மக்கள் குறை சொல்லும்போது, அவங்க கேட்கறது இல்ல” என்றார்.
அவரிடம், ”இதுபோன்ற தாக்குதல் ஒரு எம்.எல்.ஏ-வுக்குப் பொருந்துமா” எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், "நானும் ஒரு எம்.எல்.ஏ. ஒரு போர்வீரன். திரும்பத் திரும்ப முயற்சி பண்ணியும் யாராவது புரியாம இருந்தப்போ, பாலாசாகேப் தாக்கரே நமக்குக் கத்துக்கொடுத்த மொழியைப் பயன்படுத்தினேன். இது சிவசேனா பாணி. நான் ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, மல்யுத்தத்துல சாம்பியன். நான் காந்தியவாதி இல்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லைன்னு நினைக்கிறேன். இந்தப் பிரச்னையை சட்டமன்றத்திலும் எழுப்புவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட யோகேஷ் குத்ரானை காவல் துறை குழு ஒன்று சந்தித்துள்ளது. ஆனால், அவர் எந்தப் புகாரும் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இவ்விவகாரத்தை கையிலெடுத்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சிவசேனா (UBT) ஆகியவை கடுமையாக விமர்சித்துள்ளன. "இது அதிகார துஷ்பிரயேகம். அதிகார ஆணவம். ஒரு MLA சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டால், சட்டத்தை யார் நிலைநிறுத்துவார்கள்? சஞ்சய் கெய்க்வாட்தானே உணவுக் குழுவின் தலைவர். உணவின் தரத்தை அவரால் உறுதி செய்ய முடியாவிட்டால், அவர் அப்பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும்" என்று காங்கிரஸ் MLA நானா படேல் தெரிவித்துள்ளார்.