மாணிக்ராவ் கோகடே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | சட்டசபையில் ரம்மி விளையாண்டாரா வேளாண் அமைச்சர்? நடந்தது என்ன?

மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சமீபத்தில் சட்டமன்றத்தில் தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடிய காட்சி விவாதப் பொருளாகி உள்ளது.

Prakash J

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள், சட்டசபைகளில் ஆபாச படங்கள் பார்ப்பதும், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சமீபத்தில் சட்டமன்றத்தில் தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடிய காட்சி விவாதப் பொருளாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிர வேளாண் அமைச்சரான மாணிக்ராவ் கோகடே, சட்டசபையில் தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இது விவாதத்தையும் கிளப்பியது.

இதுகுறித்து சரத் பாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எம்.ஏ. ரோஹித் பவார், "தினமும் சுமார் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், மேலும் சமூகம் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியில் இருந்தாலும், NCP பாஜகவின் அனுமதியின்றி எந்த முடிவையும் எடுக்க முடியாது. எனவே விவசாய அமைச்சர் தனக்கு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடி நேரத்தைச் செலவிடுகிறார். பயிர்க் கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீடு போன்றவற்றை கோரும் விவசாயிகளின் துயரங்களை அவரால் கேட்க முடியுமா” என வினவியிருந்தார்.

அதேபோல் உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் "நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் லத்தூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் பிரசினைகளுக்காக மும்பைக்கு நடந்து செல்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, விவசாய அமைச்சர் ரம்மி விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறார்” எனப் பதிவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், ”விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டே இருந்தாலும், வேளாண் அமைச்சர் ரம்மியில் மும்முரமாக இருக்கிறார். இந்த பொய் மற்றும் ஏமாற்றும் அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மகாயுதி அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மாணிக்ராவ் கோகடே

இருப்பினும், கோகடே குற்றச்சாட்டுகளை மறுத்து, தன்னை அவதூறு செய்வதற்காக சமூக ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் பகிரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். "நான் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடவில்லை. நான் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தேன். சபை ஒத்திவைக்கப்பட்டதால், சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க யூடியூப்பிற்குச் சென்றேன். திடீரென்று ஜங்கிலி ரம்மி என்ற ஆன்லைன் சீட்டாட்ட விளையாட்டுக்கான விளம்பரம் என் திரையில் தோன்றியது. சில நொடிகளில் நான் அதைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் அந்த குறுகிய நேரத்தில், யாரோ ஒருவர் அந்த வீடியோவை படம்பிடித்தார். ரோஹித் பவார் தனது மொபைலில் ஆன்லைன் விளம்பரங்களைப் பெறவில்லையா? சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் எனது பணி குறித்து நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன், விவசாயிகளுக்காக கடுமையாக உழைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தின்போது, ”ஒவ்வொரு அரசுத் திட்டத்திலும் 3% முதல் 4% வரை ஊழல் உள்ளது” என கோகடே கூறியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.