model image meta ai
இந்தியா

மகாராஷ்டிரா | அரங்கேறிய ஆணவக் கொலை.. காதலரின் சடலத்தைத் திருமணம் செய்த காதலி!

மகாராஷ்டிராவில் ஆணவக் கொலைக்கு காதலர் பலியாகிய நிலையில், அவரது உடலுக்கு சடங்குகள் செய்து இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் ஆணவக் கொலைக்கு காதலர் பலியாகிய நிலையில், அவரது உடலுக்கு சடங்குகள் செய்து இளம்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்பால் இணையும் இரு உள்ளங்களுக்கு இவ்வுலகில் எப்போதுமே எதிர்ப்பு எழுந்துகொண்டுதான் இருக்கிறது. ஆம், காதலிக்கும் காதலர்கள் எல்லோரையும் இந்த உலகும் அவர்களது உறவினர்களும் அவ்வளவு சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஒருவேளை, தன் பிள்ளைகளின் காதல் வீட்டில் தெரிய ஆரம்பித்தால், அவர்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதமில்லை. கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி, அது ஆணவக் கொலையாகப் பதிவாகி வருகிறது.

model image

எனினும், உயிரே போனாலும் காதல் மட்டும் அவர்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆம், அப்படியான சம்பவம்தான் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் இத்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்டெட்டின் மிலிந்த் நகரில் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த சக்யாம் டேட் என்ற நபரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

ஆஞ்சலின் சகோதரருடன் நெருக்கமாக இருந்ததால், சக்யாம் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். இதன்மூலம் டேட்டிங்கில் தொடங்கிய அவர்களது நட்பு, பின்னர் காதலாக மாறியுள்ளது. அது மூன்று ஆண்டுகளைக் கடந்தும் வளர்ந்து வந்தது. ஆனால் இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆஞ்சலின் குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் காதலை கைவிடுவதாக இல்லை. இதையடுத்து ஆஞ்சலின் தந்தையும், அவரது சகோதரரும் சக்யாமைத் தீர்த்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்தைக் கேள்விப்பட்ட காதலி ஆஞ்சலின், அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

model image

அருடைய இறுதிச் சடங்குகளுக்கு முன்பு, ஆஞ்சல் தனது மணமகனுக்குச் செய்யும் சடங்குகளை அவர் செய்து, அவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு ஆஞ்சல், சக்யாம் வீட்டிலேயே நிரந்தரமாக வசிப்பதாக முடிவெடுத்து அங்கேயே தங்கியுள்ளார். தவிர, தன் காதலரைக் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர் சபதமிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.