ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | மேயர் பதவிக்காக தலைகீழாக மாறும் கூட்டணி.. ராஜ் தாக்கரேயுடன் இணைந்த ஏக்நாத் ஷிண்டே!

ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதியின் ஒரு பகுதியாக சிவசேனாவும் பாஜகவும் இருந்தாலும், கல்யாண்-டோம்பிவ்லியில் மேயர் பதவியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. இதற்காக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.

மாநகராட்சித் தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆம், இந்தத் தேர்தல் பிரிந்துகிடந்த கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. குறிப்பாக, தாக்கரே சகோதரர்கள் (ராஜ்தாக்கரே - உத்தவ் தாக்கரே) இணைந்தனர். அதேபோல் பவார் குடும்பமும் இணைந்தது. அஜித் பவார் மற்றும் ஷரத் பவார் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், அவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எதிர்பார்த்தபடி, மகாயுதி கூட்டணியான பாஜவும் - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுமே அதிகளவில் வென்றன. எனினும், அவைகளுக்குள்ளேயே தற்போது போட்டி ஏற்பட்டுள்ளன.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

உதாரணத்திற்கு மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அது, 89 இடங்களைவென்றது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு, 29 இடங்களை வென்றது. கூட்டணியாக அவர்கள் இருவரும் பெரும்பான்மையைப் பெற்றபோதும் மும்பையின் அடுத்த மேயர் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே, தனது கவுன்சிலர்களை ஹோட்டலில் பாதுகாப்பாய் வைத்துள்ளார். அவர், ஏதோ பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனாலேயே அங்கு மேயரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, ராஜ் தாக்கரேவின் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. 122 உறுப்பினர்களைக் கொண்ட கல்யாண்-டோம்பிவிலி நகராட்சி (KDMC) தேர்தலில், ஷிண்டேவின் கோட்டையாகக் கருதப்படும் இடத்தில் பாஜக, 50 இடங்களை வென்று வலுவானதாக மாறியிருக்கிறது. ஷிண்டே சேனா 53 இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதியின் ஒரு பகுதியாக சிவசேனாவும் பாஜகவும் இருந்தாலும், கல்யாண்-டோம்பிவ்லியில் மேயர் பதவியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் போட்டியிட்டுள்ளன.

ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர ஃபட்னாவிஸ்

இதற்கிடையே, ராஜ் தாக்கரேவின் கட்சி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சேனா பிரிவு 11 இடங்களை வென்றுள்ளது. KDMC-யை ஆள பெரும்பான்மைக்கு 62 இடங்கள் தேவை. இந்தச் சூழ்நிலையில்தான் பாஜகவைக் கழற்றி விட்டுவிட்டு ஷிண்டே பிரிவு ராஜ் தாக்கரேவுடன் கைகோர்த்துள்ளது. ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த், ராஜ் தாக்கரேவின் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். இது அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தை 58 ஆக உயர்த்தியுள்ளது. 62 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைவிட சற்று குறைவாக உள்ளது.

எனினும், உத்தவ் பிரிவைச் சேர்ந்த நான்கு மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டணியில் சேரலாம் என்று ஸ்ரீகாந்த் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காரணம், அது இரண்டரை ஆண்டுக்காலத்திற்கு மேயர் பதவி தருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை ஷிண்டே பிரிவு ஏற்கவில்லை. ஷிண்டே சேனா முழுக் காலத்திற்கும் மேயர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், டிசம்பர் 2025இல் தேர்தல் நடைபெற்ற அம்பர்நாத் மற்றும் அகோலா நகராட்சி மன்றங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன. அம்பர்நாத்தில், பாஜக காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. அதே நேரத்தில் அகோலாவில் அசாதுதீன் ஓவைசியின் AIMIM உடன் கூட்டணி வைத்தது. இருப்பினும், பாஜக தலைமை பின்னர் கூட்டணிகளை கடுமையாக்கியது. அம்பர்நாத்தில் காங்கிரஸ் அதன் 12 மாநகராட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.