மகாராஷ்டிரா நகராட்சி தேர்தல் | பாஜகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்.. 12 பேர் அதிரடி நீக்கம்!
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில், மாநில தலைமைக்குத் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக, அம்பர்நாத் நகர காங்கிரஸ் தலைவர் பிரதீப் பாட்டீல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில், மாநில தலைமைக்குத் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக, அம்பர்நாத் நகர காங்கிரஸ் தலைவர் பிரதீப் பாட்டீல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் ஹர்ஷவர்தன் உத்தரவின் பேரில், மாநில துணைத்தலைவர் கணேஷ் பாட்டீல் இந்த அதிரடி நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரதீப் பாட்டீலுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் "காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு நாம் 12 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆனால், மாநில தலைமையிடமோ அல்லது மாநில அலுவலகத்திடமோ எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நீங்கள் தன்னிச்சையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். இந்த விபரீத கூட்டணி குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே கட்சித் தலைமைக்குத் தெரியவந்துள்ளது என்றும், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதால், மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின்படி பிரதீப் பாட்டீல் காங்கிரஸ் கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த நடவடிக்கை மூலம், கொள்கை ரீதியாக பாஜகவுடன் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்ற செய்தியை காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது. மொத்தத்தில் பிரதீப் பாட்டீலையும் சேர்த்து 12 பேரை அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும், இதுபோன்ற உள்ளூர் அளவிலான அரசியல் ஏற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அகோட்டில் AIMIM உடனும், அம்பர்நாத்தில் காங்கிரசுடனும் தங்கள் கூட்டணிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பாஜக பிரிவுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். ”காங்கிரஸ் மற்றும் AIMIM உடனான கூட்டணி ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை முறிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய போட்டியாளர்களான பாஜகவும் காங்கிரசும், சிவசேனாவின் கோட்டைகளில் ஒன்றான, எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும், உள்ளூர் அளவிலான கூட்டணியில் கைகோர்த்ததால், அரசியல் முட்டுக்கட்டை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
60 உறுப்பினர்களைக் கொண்ட அம்பர்நாத் நகராட்சியில், சிவசேனா 27 இடங்களையும், பாஜக 14 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களையும், இரண்டு சுயேச்சைகளையும் வெற்றி பெற்றிருந்தனர். பாஜக-காங்கிரஸ்-என்சிபி கூட்டணி ஒரு சுயேச்சையின் ஆதரவுடன் பெரும்பான்மையைக் கடந்தது, இதன் விளைவாக, பாஜக கவுன்சிலர் ஒருவர் கவுன்சில் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

