மும்பை தேர்தல் | இழுபறியாகும் மேயர் பதவி.. கவுன்சிலர்களைப் பாதுகாத்த ஏக்நாத் ஷிண்டே!
மும்பை மேயர் பதவியை அடைவது எந்தக் கட்சிக்கும் எளிதல்ல என்று உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், 227 உறுப்பினர்களைக் கொண்ட மும்பை மாநகராட்சி 89 இடங்களை பாஜக வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு, 29 இடங்களை வென்றது. கூட்டணியாக அவர்கள் இருவரும் பெரும்பான்மையைப் பெற்றபோதும் மும்பையின் அடுத்த மேயர் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது. ஆம், மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் பிரதானக் கூட்டணிக் கட்சியான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு, தனது 29 கவுன்சிலர்களை விடுதியில் பாதுகாத்து வைத்துள்ளது. மும்பை மேயர் பதவியை பாஜக வெல்ல ஏக்நாத் ஷிண்டே தரப்பின் 29 கவுன்சிலர்களும் மிக முக்கியமாக உள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பாஜகவும் தனது 89 கவுன்சிலர்களை விடுதியில் தங்கவைக்க உள்ளதாகவும் இதில் யாரைக் கண்டு யார் பயப்படுகின்றனர் என்றும் எதிர்த்தரப்பில் உள்ள சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். மேயர் தேர்தலில் கட்சிகள் உடைப்பு, குதிரை பேரத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் சஞ்சய் ராவத்தின் கேள்வி கவனம் பெறுகிறது. மாநகராட்சியிலும் ஏக்நாத் ஷிண்டே பங்கு கேட்பதால்தான் மும்பை மேயர் தேர்வு தாமதமாகிறது எனக் கூறப்படுகிறது. இரண்டரை காலத்திற்கு மேயர் பதவியோ அல்லது நிதி மற்றும் முக்கிய ஒப்புதல்களைப் பெற தமது தரப்பு நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

