அஜித் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | விபத்துக்குள்ளான விமானம்.. உயிரிழந்த துணை முதல்வர்.. யார் இந்த அஜித் பவார்?

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Prakash J

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பவார், இன்று புனேவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான தொடர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பாராமதிக்குச் சென்றார். இந்த நிலையில்தான் பாராமதி விமான நிலையத்தில் அவர் சென்றுகொண்டிருந்த விமானம் இன்று காலை 8.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது, ​​இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ajit pawar

இந்த சம்பவத்தில் அஜித் பவார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பவாரின் அலுவலகத்திலிருந்தோ அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. மேலும் இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

யார் இந்த அஜித் பவார்?

தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். அஜித் பவாருக்கு கட்சியில் முன்னுரிமையை வழங்கிய சரத் பவார், அவரை முழுமையாக நம்பினார். இதற்கிடையே, அஜித் பவாரின் பதவிகளைப் பறித்து அதை முழுவதுமாக தனது மகள் சுப்ரியா சுலேவிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில்தான் கட்சியை முழுமையாக அபகரிக்க நினைத்த அஜித், பாஜகவின் துணையோடு சரத் பவார் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதோடு அதிகபட்ச எம்எல்ஏக்களின் ஆதரவோடு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கிக்கொண்டார். மகாராஷ்டிரா தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைத்திருந்த அவர், தற்போதும் துணை முதல்வராகப் பதவியேற்றிருந்தார்.

அஜித் பவார்

மாநிலத்தின் நீண்டகால துணை முதல்வர் பதவி வகித்த பெருமைக்குரியவர். கடந்த ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கூட்டணி வைக்காமல் சரத பவாருடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். எனினும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 1982இல் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினராக, அரசியலில் அடியெடுத்து வைத்த அஜித் பவார், அதன் பிறகு தொடர்ந்து 8 முறை பாரமதி சட்டமன்றத் தொகுதியில் இருந்து MLA ஆக தேர்வு செய்யப்பட்டார். பல துறைகளுக்கு அமைச்சராகவும் செயல்பட்டிருக்கிறார். 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். 1991இல் 10வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் அந்த பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.