பண்டிட் விஷ்ணு ரஜோரியா web
இந்தியா

“4 குழந்தை பெறும் பிராமணர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்” - ம.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு

குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பிராமணர்களுக்கு ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அமைச்சர் பேசியுள்ளார்.

PT WEB

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மோகன் யாதவ் முதலமைச்சர் ஆக உள்ளார். இந்த பாஜக ஆட்சியில் அமைச்சர் ஆக இருப்பவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா. இவர் அம்மாநில பிராமண வாரிய தலைவராகவும் இருக்கிறார். இவர்தான், குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பிராமணர்களுக்கு ஒரு லட்சம் சன்மானம் என்று அறிவித்து இருக்கிறார்.

4 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஒரு லட்சம் சன்மானம்..

போபலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷ்ணு ரஜோரியா, “இன்றைய இளம் தலைமுறையினர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்க முடியாது. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு தான் இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.

இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. நீங்கள் (பிராமணர்கள்) குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக்கொண்டால் பரசுராம் கல்யாண் வாரியம் சார்பாக ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும்” என்றார். குறிப்பாக, தான் வாரியத்தின் தலைவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இது தொடரும் என்று உறுதிபட தெரிவித்தார்.

சர்ச்சையை கிளப்பிய கருத்து..

அமைச்சர் விஷ்ணு ரஜோரியாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் முகேஷ் நாயக், “மக்கள் தொகை வளர்ச்சி புதிய பிரச்னையாக உலக அளவில் தற்போது உருவெடுத்துள்ளது. குறைவான குழந்தைகளை பெற்றுக் கொண்டால்தான் அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட விஷயங்களை உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்த விஷயத்தை இந்து - முஸ்லீம் பிரச்னையாக மாற்றுகிறார்கள். இதெல்லாம் கற்பனையாக சிந்தனைகள். நாம் ஒற்றுமையுடன் இருந்தால்தான் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாஜக அரசு ஒதுங்கி இருக்கிறது. இது அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளது.