கடும் எதிர்ப்பு எதிரொலி.. பொங்கல் பண்டிகை நாளான ஜன.15-ல் நடக்கவிருந்த UGC NET தேர்வு ஒத்திவைப்பு!
பொங்கல் பண்டிகை வருகின்ற 14-ம் தேதி முதல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என கொண்டாடப்படவிருக்கிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடிதம் எழுதிய நிலையில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
UGC NET ஒத்திவைப்பு..
UGC NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கும் அறிவிப்பில், ”ஜனவரி 15, 2025 அன்று பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிற பண்டிகைகளின் காரணமாக UGC NET டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, ஜனவரி 15, 2025 அன்று நடப்பதாக திட்டமிடப்பட்ட UGC-NET தேர்வை மட்டும் ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. புதிய தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரம் ஜனவரி 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் தேர்வு முந்தைய அட்டவணையின்படி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வுக்கான தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ugcnet.nta.ac.in.) பின்னர் தெரிவிக்கப்படும்.