மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று, கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. அதாவது, ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதற்குப் பதிலளித்த நிறுவனம், “நிலப்பற்றாக்குறை காரணமாகவே பாலம் இவ்வாறு கட்டப்பட்டது” எனத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, “பாலம் கட்டுவதற்கான ஒரே வழி இதுதான். மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே உள்ளது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லை. இது முழுப் பாதுகாப்பு நிறைந்ததுதான்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங், "ஒரு பாலம் கட்டப்பட்ட பிறகு, நிபுணர்கள் திடீரென்று தோன்றி இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள். எந்தவொரு பாலத்தையும் கட்டும்போது நிறைய தொழில்நுட்ப அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இது ஒரு குற்றச்சாட்டாக இருந்தால், அது விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுகுறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 90 டிகிரி ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில்வே துறை தேவையான நிலத்தை ஒப்படைத்தவுடன், பாலத்தில் மாற்றங்கள் செய்யப்படும். அதன் பிறகு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை (PWD) தெரிவித்துள்ளது. இதில் போக்குவரத்துக்கு ஒரு தடையாக இருக்கும் 90 டிகிரி திருப்பத்தில் தற்போதுள்ள தண்டவாளத்தை அகற்றுவதும் அடங்கும்.
புதிய வடிவமைப்பு, கூர்மையான திருப்பத்தை படிப்படியாக வளைவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் பாலத்தின் அகலத்தைத் தோராயமாக மூன்று அடி அதிகரிக்கும். இந்தக் கூடுதல் இடம் வாகனங்களின் இயக்கத்தைக் கணிசமாக எளிதாக்கும். நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.