ம.பி. | ’எப்படி யோசிச்சு இருப்பாங்க..!’ - சர்ச்சையை சந்தித்த 90 டிகிரி போபால் ரயில் பாலம்!
நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்கள் அதிகரிப்பால் சாலைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. இதற்காக சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர, தேவையான இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பயனர் ஒருவர், “இது போபாலில் உள்ள ஐஷ்பாக் ரயில் மேம்பாலம். இந்த நவீன பொறியியல் அற்புதத்தை உருவாக்க பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினீயர்கள் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். இது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த 90° திருப்பம் ஒரு பேரழிவாகும். சரியான வசதிகள், அறிவிப்புப் பலகைகள், வேகத்தடைகள் மற்றும் விளக்குகள் என எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்த வேண்டியவர்களுக்கு வாழ்த்துக்கள். அதேநேரத்தில், இதற்குப் பொறுப்பான முறையில் வடிவமைத்த பொறியியல் குழுவிற்கு ஹூவர் பதக்கம் வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
“நிலப்பற்றாக்குறை மற்றும் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் இருந்ததால்தான் பாலம் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது” என அதைக் கட்டிய நிறுவனம் பி.டி.ஐ.க்கு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, பிடிஐக்கு அளித்துள்ள செய்தியில், “பாலம் கட்டுவதற்கான ஒரே வழி இதுதான். மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே உள்ளது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லை. இரண்டு காலனிகளையும் இணைப்பதே ஆர்ஓபியின் நோக்கம். இந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இது முழுப் பாதுகாப்பு நிறைந்ததுதான். இந்திய சாலை அறிவுறுத்தல்களின்படி வாகனங்கள் இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.