செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த ஆண்டு பரபரப்பான பேசுபொருளானது. இந்நிலையில், அவர் அந்தப் பணம் குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த குழுவின் அறிக்கையை பிரபல செய்தி நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 14, 2025 அன்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி துக்ளக் கிரசென்ட் பகுதியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புப் படையினர், வீட்டில் உள்ள ஓர் அறையில் எரிந்த நிலையில் குவியல் குவியலாக ரூ.500 நோட்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அது எந்த வகையில் வந்த பணம், அதன் மூலாதாரம் மற்றும் உரிமை குறித்து நீதிபதி வர்மா திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லை என நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பணம் கைப்பற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையிலும் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, முக்கிய ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றும், சட்டப்படி அந்த அறை சீல் வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பே அங்கிருந்த ஆதாரங்களின் நிலை மாற்றப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பணம் காணாமல் போனது அல்லது கிடைக்காமல் போனதற்கும் உரிய விளக்கம் இல்லை என குழு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நீதிபதி வர்மா தனிப்பட்ட முறையில் அந்தப் பணத்தை அகற்றியதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் குழு குறிப்பிட்டுள்ளது.
அந்த பணக்குவியல் தொடர்பாக மார்ச் 22, 2025 அன்று வர்மா அளித்த பதில் உட்பட அவரது விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும், அவரது பதிலில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் இல்லை என்றும் குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட நிலையில், நீதிபதி வர்மா பின்னர் பதவி விலகியதால், அந்த நடவடிக்கைகள் தற்போது நடைமுறையில் அர்த்தமற்றதாக ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது.