நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. புயலை கிளப்பிய விவகாரம்.. யார் இந்த யஷ்வந்த் வர்மா?
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. இவர் தங்கியிருக்கும் அதிகாரப்பூர்வ பங்களாவில் கடந்த வாரம் ஹோலி விடுமுறையின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தீயணைக்கும் பணிக்கு இடையே அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் கணக்கில் வராத பணம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தின் போது நீதிபதி யஷ்வந்த வர்மா நகரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி வீட்டில் இவ்வளவு கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
கொலிஜீயம் கொடுத்த பரிந்துரை
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத்திற்கு மாற்றுவதற்கான பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ளதாகவும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம் நீதிபதி யஷ்வந்த் வெர்மாவின் இடமாற்றத்தை ஒருமனதாக ஒப்புக்கொண்டதாகவும் கொலீஜியம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது ஒருபுறம் இருக்க நீதிபதி வர்மாவை ராஜினாமா செய்யச் சொல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் அவ்வாறு செய்ய மறுத்தால், தலைமை நீதிபதியால் உள் விசாரணை தொடங்கப்படலாம் என்றும் இது நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான முதல் படியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பணம் குறித்து நீதிபதி யஷ்வந்த் இதுவரை எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. அத்துடன், இன்று நீதிமன்றத்திற்கும் அவர் வரவில்லை. நீதிமன்றம் தரப்பில் அவர் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த யஷ்வந்த் வர்மா?
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, யஷ்வந்த் வர்மா உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் (தற்போது பிரக்யாராஜ்) 1969 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் பி.காம் முடித்த அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கும் ரெவா பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி படித்தார். 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அவர் பதிவு செய்தார். வழக்கறிஞராக பயிற்சி எடுத்து வந்த அவர், 2006 முதல் 2014 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக முதன் முதலாக நியமனம் செய்யப்படும் வரை நீதிமன்றத்தின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டார்.
கபில் சிபல் கேள்வி
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நீதித்துறைக்குள் நடைபெற்றுள்ள இந்த ஊழல் விவகாரம் மிகவும் முக்கியமான பிரச்சினை. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பணி நியமனம் எப்படி நடக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இடமாற்றம் மற்றும் சரியாக தண்டனையாக இருக்காது என்றும் கடுமையான நடவடிக்கை தேவை என்றும் பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.