வாக்கு எண்ணிக்கை  pt web
இந்தியா

பிஹார் தேர்தல் | முந்தும் என்.டி.ஏ துரத்தும் இண்டியா... களத்தில் இருப்பது யார் யார் ? ஓர் பார்வை !

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தேர்தல் களத்தில் இருப்பது யார் யார்? கூட்டணிகள் விவரம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்..

PT WEB

பிஹாரில் இரண்டு கட்டங்களாக நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகிஇருந்தன. இதில் 71.6 விழுக்காடுஆண்களும், 62.8 விழுக்காடு பெண்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இன்று மதியத்துக்குள் பிஹாரில் வெல்லப்போவது யார் என்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டு விடும் நிலையில், தேர்தல் களத்தில் இருப்பது யார் யார்? என்பது குறித்துப் பார்க்கலாம்.

பிஹார் தேர்தல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார்?

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக பாரதிய ஜனதாவும், ஜக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி 29 இடங்களில் போட்டியிட்டது. ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரியா லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

மகாகட்பந்தன் கூட்டணியில் யார், யார்?

மகாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரியா தள ஜனதா தளம் 143 தொகுதிளில் போட்டியிட்டது. இதன் மூலம் பிஹார் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சியாக அக்கட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 20 இடங்களிலும், முகேஷ் சஹானி கட்சி வி.ஐ.பி கட்சி 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணி

களத்தில் மற்றவர்கள் யார், யார்?

இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிட்டன, ஐ.ஐ.பி. 3 கட்சி 3 இடங்களிலும், ஜன்சக்தி ஜனதா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி, நட்பில் போட்டியை நடத்தின. சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய சக்தியாக விளங்கும் மகா ஜனநாயக கூட்டணி 79 இடங்களில் போட்டியிடுகிறது. ஒவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ கட்சி, ராஷ்ட்ரியா லோக் தள், ஆசாத் சமாஜ் ஆகியவை தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன . அப்னி ஜனதா தளம் நான்கு தொகுதிகளில் களம் கண்டது.

களத்தில் பிரசாந்த் கிஷோர் கட்சி..

இவை தவிர 243 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முதலில் அறிவித்த பிரசாந்த் கிஷோரின் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி 121 இடங்களிலும், ஆம் ஆத்மி 131 இடங்களிலும் போட்டியிட்டன. குடும்ப பிரச்னையில் தனியாக கட்சி தொடங்கிய லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் ஜன் சக்தி ஜனதா கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது.

பிரசாந்த் கிஷோர்

மகுடம் யாருக்கு ?

பிஹார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.