எஸ்.என்.சுப்ரமணியன் எக்ஸ் தளம்
இந்தியா

”உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்” - 90 மணிநேர வேலையை வலியுறுத்திய L&T தலைவர்!

லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனிடம்

Prakash J

இந்தியாவின் தொழிலதிபர்களில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியும் ஒருவர். இவர், சமீபகாலமாக 6 நாள் வேலை குறித்த கருத்துகளை முன்வைத்து வருகிறார். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே அவரது வலுவான கோரிக்கையாக உள்ளது. இவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

என்றாலும் அவ்வப்போது, இந்த கருத்து மீண்டும்மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இவ்விவாதம் தொடர்பாக Shaadi.com நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுபம் மிட்டலும், Emcure Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ நமீதா தாபரும் மோதிக் கொண்டனர்.

அதானி, நாராயணன் மூர்த்தி

அனுபம் மிட்டலின் 70 மணி நேர வேலைக்கு, நமீதா தாபர் தக்க பதிலடி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் அதானி, “வேலை - வாழ்க்கைச் சமநிலை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவிட்டால் போதுமானது. சிலருக்கு 8 மணி செலவிட வேண்டும். எப்படியாயினும், உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் செய்யும்போது உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும். நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ”லார்சன் & டூப்ரோ நிறுவனம், அதன் ஊழியர்களை ஏன் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வைக்கிறது” என்பது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துள்ள அவர், “ஞாயிற்றுக்கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலைசெய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” என்றார்.

எஸ்.என்.சுப்ரமணியன்

பின்னர் தொடர்ந்த அவர், “என்னுடைய சீன நண்பர் ஒருவர், ’சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும். காரணம், சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள்; அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்’ என்றார். அப்படியானால் அதுதான் உங்களுக்கான பதில். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்தக் கருத்து இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. பயனர் ஒருவர், “நாராயணமூர்த்தியாவது 70 மணிநேரம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவரோ, 90 மணிநேரம் என்று சொல்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவரோ, “அதனால்தான் இந்தியாவில் அரசாங்க வேலைகளுக்கான மோகம் உச்சத்தில் உள்ளது. தனியார் துறை, ஊழியர்களை துன்புறுத்துவதில் மட்டுமே சிறந்தது” எனப் பதிவிட்டுள்ளார். இப்படி, பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதுபோல் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் கருத்து தெரிவித்துள்ளார் #MentalHealthMatters என்பதை பதிவிட்டு "இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்.என்.சுப்ரமணியன்

இதற்குப் பதிலளித்துள்ள லார்சன் & டூப்ரோ செய்தித் தொடர்பாளர், "தலைவரின் கருத்துகள் பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் சராசரியாக 6.5 நாட்கள் தொடர்ந்து வேலை பார்த்தாலும், அவர் கையில் வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறுவதாகவும், அதிலும் 90 சதவிகிதம் பேர் 3 வருடங்களில் வேலையைவிட்டுச் செல்வதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதிலும் முதல் வருடத்திலேயே 50-60 சதவிகிதம் பேர் வெளியேறுவதாக அது தெரிவித்துள்ளது. இதிலும் கொடுமை என்னவென்றால், இவர்கள் ஒருநாள்கூட வீட்டுக்குப் போவதே கிடையாதாம்.