70 மணிநேர வேலை | மீண்டும் கிளம்பிய விவாதம்.. சாட்டையடி கொடுத்த பெண் சிஇஓ!
இந்தியாவின் தொழிலதிபர்களில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியும் ஒருவர். இவர், சமீபகாலமாக 6 நாள் வேலை குறித்த கருத்துகளை வைத்து வருகிறார். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே அவரது வலுவான கோரிக்கையாக உள்ளது.
சமீபத்தில் டெல்லியில் சி.என்.பி.சி - டிவி18 குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் பேசிய அவர், "இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு அவசியம் தேவை. அதற்கு வாரத்துக்கு 6 நாள் வேலை முக்கியம் என்ற நிலைப்பாட்டில், நான் உறுதியாக இருக்கிறேன். வாரம் 6 நாள் வேலை நாட்களாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். இதை என் இறுதிமூச்சு இருக்கும்வரை கடைபிடிப்பேன். ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த கருத்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து Shaadi.com நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுபம் மிட்டல், "நீங்கள் உழைக்கும் மணிநேரத்தை எண்ணி வாழ்க்கையில் அசாதாரணமான எதையும் சாதிக்கப் போவதில்லை. சிறந்த நிலையை அடைய நிலையான நேரத்திற்கு அப்பால் உழைக்க வேண்டும். அசாதாரண சாதனைகளுக்காக பாடுபடுபவர்களுக்கு கடிகார நேரம் என்பது வெற்றியின் அளவீடு அல்ல” என நாராயணமூர்த்தியின் 70 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆதரவாகப் பதிலளித்திருந்தார்.
அனுபம் மிட்டலின் இந்தக் கருத்துக்கு Emcure Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ நமீதா தாபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ பெரிய நிறுவனங்களில் டன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவனத் தலைவர்கள், தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் வேண்டுமானால் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யட்டும். கடைசிவரை தினசரி 24 மணிநேரம்கூட வேலை செய்யட்டும்.
ஆனால், அதையே குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றது. இன்று என் கணக்காளர் என்னிடம் சம்பளம் வாங்குகிற போதும் என்னிடம் இருக்கும் சொத்து மதிப்பு அவரிடம் இல்லை. அதற்காக அவர் ஏன் இத்தனை மணிநேரம் உழைக்க வேண்டும்? ஒருவேளை, அவர் அப்படி உழைத்தால், அதனால் அவருக்கு கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். என்றாலும், சிலசூழ்நிலைகளில் நீண்டநேரம் உழைக்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.