பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியல் மற்றும் தனது குடும்பத்தை விட்டு விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா பல புதிய குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. எதிர்த்துப் போட்டியிட்ட மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களை மட்டுமே பெற்று மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில்தான் நேற்று (நவம்பர் 16), முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியல் மற்றும் தனது குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்று ரோகிணி ஆச்சார்யா பல புதிய குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், அழுக்கான சிறுநீரகத்தை தந்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்புகளையும் கோடிக்கணக்கில் பணத்தையும்தான் பெற்றதாக சிலர் கூறியதாக ரோஹிணி ஆச்சார்யா குமுறியுள்ளார். தனது தந்தையை காப்பாற்ற சிறுநீரகத்தை தந்து பெரும் பாவம் செய்து விட்டதாக தற்போது உணர்வதாகவும், இதற்கு பதில் தன் கணவர், குழந்தைகளை கவனித்திருந்திருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தன்னை ஒருவர் செருப்பால் அடிக்க வந்ததாகவும், மோசமான வார்த்தைகளுக்குதான் ஆளானதாகவும் இன்னொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு குடும்பத்திலும் தங்கள் பெண்ணை இப்படி அவமதிக்கமாட்டார்கள் என்றும் சுய மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவே வெளியேறியதாகவும் ரோஹிணி தெரிவித்துள்ளார். அவர்கள் என்னை தாய் வீட்டை விட்டு வெளியேறச் செய்து அனாதை ஆக்கி விட்டதாகவும் ரோகிணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தனிக்கட்சி தொடங்கி, பீகார் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.