கைது செய்யப்பட்டவர்கள் pt web
இந்தியா

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளின் பகீர் பின்னணி

கொல்கத்தாவில் மேலும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. 24 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

PT WEB

“பாலியல் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்.. எங்களுக்கு நீதிதான் வேண்டும்.. நாடகம் அல்ல. தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்” என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோனோஜித் மிஷ்ரா, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சமயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய பேரணிக்கான இந்த பதிவுக்கு இப்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பதிவை இட்ட மோனோஜித் மிஷ்ராதான், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளி.

மோனோஜித் மிஷ்ரா

சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவரான மோனோஜித் மிஷ்ரா, 45 நாட்களுக்கு முன்புதான் தற்காலிக பணியாளராக சேர்ந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவியை யூனியன் அறைக்கு அழைத்துச் சென்று பேசத்தொடங்கிய மோனோஜித், பிரதிம் முகர்ஜி மற்றும் ஷெய்த் அஹ்மத் ஆகியோரும் தவறாக நடக்க முயன்றுள்ளனர். மாணவிக்கு அதிர்ச்சியில் PANIC ATTACK ஆனதைத்தொடர்ந்து, அவருக்கு இன்ஹேலர் அளித்து உதவியுள்ளனர். பின்னர் மாணவியை மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியை அவர் கல்லூரியில் சேர்ந்த முதல்நாளிலேயே குறிவைத்து திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காலில் விழுந்து கெஞ்சியும் மாணவியை விடாமல் இந்த மூவர் கும்பல் துன்புறுத்தியுள்ளது. மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து அதனைக் காட்டி மிரட்டியுள்ளனர். மாணவியின் காதலரை கொன்றுவிடுவதாகவும், இக்கும்பல் மிரட்டியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தையடுத்து 3 குற்றவாளிகளும், இவர்களுக்கு உதவிய காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரித்துவருகிறது.

இதுபோன்ற கொடூரச்செயல் இவர்களுக்கு முதல்முறை அல்ல. இந்த மூன்று பேரும் சக மாணவிகளை புகைப்படம் எடுத்து மார்ஃபிங் செய்து மிரட்டி பாலியல் தொல்லை செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள். விசாரணையின் ஒருபகுதியாக இந்த மூன்று பேரின் டிஎன்ஏ உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்துள்ள காவல் துறையினர், இவர்களின் செல்போன்களில் வேறு வீடியோக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். சம்பவம் நடந்த நாளன்று கல்லூரியில் இருந்த 25 பேரை விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிம் முகர்ஜி, ஸெயித் அஹமது இருவரும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த பயிற்றுநரான மோனோஜித் மிஷ்ராவும் நீக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக இப்போது இந்த சம்பவம் மேற்குவங்கத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.