இங்கிலாந்து மண்ணில் டி20 சதம்.. ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட ஸ்மிரிதி மந்தனா!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமில் தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 15 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 112 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் TEST, ODI, T20 என 3 வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் ஸ்மிரிதி மந்தனா.
ஸ்மிரிதி சதத்தின் உதவியால் 210 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை 113 ரன்களில் சுருட்டி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது டி20 வடிவத்தில் இங்கிலாந்து அணி பதிவுசெய்த மிகப்பெரிய தோல்வியாகும்.
டி20 தரவரிசையில் உச்சம்தொட்ட ஸ்மிரிதி மந்தனா..
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐசிசியின் மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் 771 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏற்கனவே ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஸ்மிரிதி மந்தனா, பேட்டிங் தரவரிசையிலும் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இது டி20 தரவரிசையில் அவருடைய சிறந்த முன்னேற்றமாகும்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடக்கவிருக்கிறது.