ஏமனைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி, அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
எனினும் அதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸ், தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நிமிஷாவின் தண்டனை தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை எனவும், அவருக்கு மரண தண்டனை உறுதி எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் மீதே தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி புகார் தெரிவித்திருந்தார்.
”நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற வசூலித்த பணத்தை சாமுவேல் ஜெரோம் தவறாகப் பயன்படுத்தினார். அவர் தனது வக்கிர செயலை நிறுத்தவில்லை என்றால் உண்மை வெளிப்படும்” என எச்சரித்திருந்தார். இதற்கிடையில், நிமிஷா பிரியா வழக்கில் இடைத்தரகராக இருந்த ஜெரோம் என்பவரை சர்வதேச செயல்பாட்டு கவுன்சில் வெளியேற்றியுள்ளது.
இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மகளான மிஷெல், தன் தாயாரைக் காப்பாற்றக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல், ஏமனில் இருக்கிறார். இந்திய கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ. பாலுடன் சேர்ந்து, ஏமனில் உள்ள ஹவுதி நிர்வாகத்திடம் தனது தாயாரை விடுவிக்குமாறு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில், ”நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா. தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர உதவுங்கள். நான் அவளைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். நான் உன்னை மிஸ் செய்கிறேன் அம்மா” என அதில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவரது கணவர் டாமி தாமஸ், ”தயவு செய்து என் மனைவி நிமிஷா பிரியாவைக் காப்பாற்றி, அவள் சொந்த ஊருக்குச் செல்ல உதவுங்கள்” என்று நேரடியாகக் கேட்டுக் கொண்டார்.