பானு முஷ்டாக், சித்தராமையா முகநூல், பிடிஐ
இந்தியா

மைசூரு தசரா விழா: இஸ்லாமிய எழுத்தாளர் தொடங்கிவைக்க தடையில்லை.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Prakash J

மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தசரா விழாவைத் தொடங்கிவைக்க இஸ்லாமிய எழுத்தாளருக்கு அழைப்பு

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் அழைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடப்பாண்டு மைசூருவில் தசரா விழாவை பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

பானு முஷ்டாக்

அவர், “கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற தசரா மஹோத்சவத்தைத் தொடங்கி வைப்பார் என்றும், எங்கள் மாவட்ட நிர்வாகம் பானு முஷ்டாக்கிற்கு முழு மரியாதையுடன் முறையான அழைப்பை வழங்கும்" என்றும் அவர் கூறியிருந்தார். அவர், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரம் கர்நாடக மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் பிரதாப் சிம்ஹா இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இந்த விவகாரம், கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மோதலாக மாறியது. எனினும், தசராவைத் தொடங்கி வைப்பது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் கருத்து தெரிவித்த எழுத்தாளர் பானு முஷ்டாக், "அன்னை சாமுண்டேஸ்வரி மீது எனக்கு மரியாதை உண்டு" எனத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இஸ்லாமிய எழுத்தாளருக்கு எதிராக மனு

இந்த நிலையில், மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தசரா விழா ஒரு பாரம்பரியமான இந்து விழா என்றும், அதனை இஸ்லாமியப் பெண் ஒருவர் தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறி, பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கன்னட மொழிக்கு எதிராக அழைக்கப்பட்டவர் சில கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், இந்து அல்லாதவராக இருப்பதால், மத விழாக்களையும் உள்ளடக்கிய தசரா விழாவைத் தொடங்கி வைக்க அனுமதிக்கக் கூடாது” என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம்
இதுபோன்ற விஷயங்களில் இந்து-முஸ்லிம் பிளவை ஏற்படுத்துவது மிக மோசமான குற்றமாகும், மேலும் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி

மனுவைத் தள்ளுபடிசெய்த கர்நாடக உயர்நீதிமன்றம்

ஆனால் அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி, “கடந்த காலத்தில், எழுத்தாளர் நிசார் அகமது அழைப்பாளராக இருந்தபோது, ​​மனுதாரரான பிரதாப் சிம்ஹா அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார் என்றும், தசரா விழா ஒரு மதச்சார்பற்ற விழா என்றும், அதை ஒரு மத நிகழ்வாகக் குறைப்பது ஒரு குறுகிய பார்வை” என்றார். மேலும் அவர், “இது அனைத்து மக்களும் பங்கேற்கக்கூடிய ஓர் அரசு விழா. அழைப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அனைத்து தரப்பு உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழுவால் செய்யப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் இந்து-முஸ்லிம் பிளவை ஏற்படுத்துவது மிக மோசமான குற்றமாகும், மேலும் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “விழாவைத் தொடங்கி வைக்க யாரை அழைப்பது என்பது அரசின் தனிப்பட்ட முடிவு” என்று கூறி மனுக்களை நிராகரித்தனர்.

பானு முஷ்டாக்கிற்கு எதிர்ப்பு ஏன்?

கடந்த 2023ஆம் ஆண்டு கன்னட மொழியை, ’புவனேஸ்வரி தேவி’ வடிவில் வழிபடுவதாக எழுத்தாளர் பானு முஷ்டாக் விமர்சித்துள்ளார். அது தன்னைப் போன்ற மொழியியல் சிறுபான்மையினருக்கு விலக்கு அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த பழைய காணொளியின் வாயிலாகவே இந்த எதிர்ப்பு அலை உருவாகியது.

பானு முஷ்டாக்

யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான பானு முஷ்டாக், கர்நாடகாவின் ஒரு சிறிய நகரத்தில் இஸ்லாம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொடக்கம் முதலே கன்னடத்தைக் கற்றுக் கொண்ட அவர், அம்மொழியில் சிறந்து விளங்கினார். அது, பின்னர் அவரது இலக்கிய வெளிப்பாட்டின் மொழியாக மாறியது. பள்ளியிலேயே அவர் எழுதத் தொடங்கினாலும், அவருடைய படைப்பு வெளியாக பல ஆண்டுகள் ஆகின. பானுவின் முதல் சிறுகதை, அவருடைய திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து 27ஆவது வயதில் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் வெளியானது. எனினும், அவருடைய திருமண வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் உணர்ச்சிப் போராட்டத்தால் குறிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, பத்திரிகை ஒன்றில் நிருபராகச் சேர்ந்து, தனது கதைப் பயணத்தை அவ்வழியே பெருக்கியுள்ளார்.