டி.கே.சிவகுமார், சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா முதல்வர் ரேஸ்.. டி.கே.சிவகுமாருக்கு ராகுல் குறுஞ்செய்தி.. விரைவில் நாற்காலி மாற்றம்?

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது. இந்த நிலையில் டி.கே.சிவகுமாருக்கு ராகுல் காந்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

Prakash J

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது. இந்த நிலையில் டி.கே.சிவகுமாருக்கு ராகுல் காந்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார். என்றாலும், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை எட்டியுள்ளது, ​​இதனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. இது சிலரால் ’நவம்பர் புரட்சி’என்று குறிப்பிடப்படுகிறது.

சித்தராமையா, டி.கே சிவக்குமார்

இந்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் விசுவாசமான எம்.எல்.ஏக்கள் சிலர், டெல்லிக்குப் படையெடுத்து, இதுதொடர்பாக தலைமையிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், தற்போதைக்கு இதில் எந்த விவாதமும் செய்யப்படாது என டெல்லி தலைமை பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த விவகாரம் கர்நாடக காங்கிரஸ் அரசில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, டிசம்பர் 1 நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னர் முதலமைச்சரை மாற்றுவது குறித்து காங்கிரஸ் உயர்மட்டம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்புகொள்ள முயன்றார். ஒரு வாரமாக அவரைத் தொடர்புகொள்ள முயன்ற நிலையில், தற்போது டி.கே.சிவகுமாருக்கு ராகுல் காந்தி பதிலளித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கட்சி வட்டாரங்களின்படி, “சிவகுமார் ராகுல் காந்தியுடன் உள்விவகாரங்கள் குறித்து பேச முயன்று கொண்டிருந்தார் . அதற்கு ராகுல் காந்தி ஒரு சிறிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் ’தயவுசெய்து காத்திருங்கள், நான் உங்களை அழைக்கிறேன்’ எனப் பதிலளித்துள்ளார்” எனத் தெரிவிக்கின்றன வட்டாரங்கள்.

சித்தராமையா, டி.கே சிவக்குமார்

இதுதொடர்பாக, நவம்பர் 29ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட சிவகுமார் தயாராகி வருவதாகவும், அதேநாளில் சோனியா காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, டெல்லியில் கர்நாடக தலைவர்கள் பிரியங்க் கார்கே மற்றும் சரத் பச்சகவுடா ஆகியோரை ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை மாநிலத்தில் வலுவாக வைக்கும் பொருட்டும், வாக்கு வங்கியைச் சிதறவிடாத வகையிலும் அதற்கான பணிகளிலும் திட்டங்களிலும் தலைமை ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.